Published : 04 Apr 2020 09:32 AM
Last Updated : 04 Apr 2020 09:32 AM

பிரதமரின் வேண்டுகோளை ஏற்போம்; விளக்கேற்றி ஒளிமயமான வாழ்வுக்கு வழிவகுப்போம்; வாசன்

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று விளக்கேற்றி ஒளிமயமான வாழ்வுக்கு வழி வகுப்போம் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஏப்.4) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய, மாநில அரசுகள் கரோனா வைரஸ் பரவலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க ஆக்கப்பூர்வமான முறையிலே நடவடிக்கை எடுத்து வருவது நமக்கெல்லாம் கரோனாவில் இருந்து தப்பிவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

இச்சூழலிலே எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் முயற்சிகளுக்கு துணை நின்றால் தான் பொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் என்று மக்கள் எண்ணுவார்கள். அதனை விடுத்து ஏதாவது குறை கூறி அரசியலாக்க நினைத்தால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

ஏனென்றால் கரோனா உலக நாடுகளையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொடிய வைரஸ் நோய். இப்பேற்பட்ட சூழலில் உலகிலேயே 2-வது மிகப்பெரிய நாடான இந்தியாவில் உள்ள சுமார் 130 கோடி மக்களை கரோனாவிடம் இருந்து காப்பாற்றுவது எளிதான காரியம் அல்ல.

இதற்கு தேவை அர்ப்பணிப்பு உணர்வோடான செயல்பாடும், கடுமையான முயற்சியும் என்றால் அதே சமயம் ஏழை, எளிய, நடுத்தர மற்றும் சாதாரண மக்கள் அடைந்துள்ள சுமையை குறைப்பதும் தான்.

பல அரசியல் கட்சிகளை உடைய மாநில அரசுகள் கரோனாவை ஒழிக்கக்கூடிய பணிகளில் முழு மூச்சாக ஈடுபடுகிறது. இப்படி இருக்கும் போது அகில இந்திய அளவில் பொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் முயற்சியை குறை கூறினால் அது எடுபடாது.

எனவே கரோனாவை இந்தியாவில் ஒழிப்பதற்கு தேவை அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த ஒத்துழைப்பும், ஆதரவும் என்பதால் எதிர்க்கட்சிகளும் மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கக்கூடிய வகையிலே செயல்பட வேண்டும்.

மேலும் இப்போதைய இந்தியாவுக்கு தேவை தனித்திரு, விழித்திரு, கரோனாவை ஒழித்திடு. குறிப்பாக பிரதமர் கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஏற்கெனவே தொலைக்காட்சி வாயிலாக, வானொலி வாயிலாக ஆற்றிய உரைகள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

அதாவது, கடந்த 22 ஆம் தேதியன்று கைத்தட்ட கேட்டுக்கொண்டது ஒற்றுமையின் அடையாளம். மேலும் நேற்று ஆற்றிய உரையில் நாளைய (ஏப்.5) தினம் விளக்கேற்ற கேட்டுக்கொண்டது நம்பிக்கையின் அடையாளம். ஆக நாம் ஒற்றுமையோடு செயல்படுவோம், நம்பிக்கையோடு செயல்படுவோம்.

இந்த சோதனையான காலத்தில் இருந்து மீண்டு வருவோம். ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கான காலம் இது, தேச பக்தியை வெளிப்படுத்துவதற்கான காலம் இது, இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. விமர்சனத்துக்கும், அரசியலுக்கும் இது நேரமல்ல. இதுவே நம் அனைவரின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

சமூக விலகலை கடைபிடித்து, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க, கரோனா என்ற கொடிய நோயினால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க போராடும் பிரதமருக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் நம்பிக்கை கொடுக்கும் வகையில் துணை நிற்க வேண்டும்.

ஏற்கெனவே கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு கொடுத்து வருகின்ற வேளையில் தொடர்ந்து பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாளை ஞாயிறு ஏப்ரல் 5 ஆம் தேதியன்று இரவு 9 மணிக்கு விளக்கேற்றி ஒளிமயமான வாழ்வுக்கு வழி வகுப்போம்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x