

இறைச்சிக் கடைகள் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால், அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் எவ்வளவுஅறிவுறுத்தினாலும் இறைச்சி கடைக்காரர்களும், பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை.
இதனால் சென்னையில் கரோனாவைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளது. இந்நிலையில், சென்னையில் இறைச்சிக் கடைகள் அனைத்தை யும், ஏப்ரல் 4 முதல் 12-ம் தேதிவரை 9 நாட் களுக்கு மூட மாநகராட்சி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இதற்கிடையில் ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஏப்ரல் 6-ம் தேதி கடை மூடல்
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை யில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகள், மீன் கடைகள் வரும் ஏப்ரல் 6-ம் தேதி மூடப்பட உள்ளன. மாநகராட்சி இறைச்சிக் கூடங்களைத் தவிர வேறு இடங்களில் விதிகளை மீறி வெட்டப்பட்ட, மாநகராட்சி முத்திரை இல்லாத ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி விற்கப்படுவது தெரிய வந்தால் அந்தக் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். அவர்கள்மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இறைச்சிக் கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால், அதற்கு கடைக்காரர்தான் பொறுப்பு. அவ்வாறு விதிகளை பின்பற்றாத கடைகளை உடனடியாக மூடி சீல் வைக்கப்படும் என்றார்.