

கரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டாலும், டெல்லி நிகழ்வுக்கு சென்று வந்த 30 பேர் மதுரை தோப்பூர் ‘கரோனா’ சிறப்பு வார்டில் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்தவாரம் டெல்லி நிகழ்வுக்கு சென்று வந்தவர்கள் சிலருக்கு ‘கரோனா’ தொற்று இருப்பது தெரிய வந்தது.
அதனால், அந்த நிகழ்வுக்கு சென்று வந்தவர்களை தாங்களாகவே வந்து பரிசோதனை செய்துகொள்ள அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.
அதனால், இந்த நிகழ்வுக்கு சென்று வந்தவர்கள் அவர்களாகவே முன் வந்து பரிசோதனை செய்து கொண்டனர்.
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து டெல்லி நிகழ்வுக்கு சென்றவர்கள், மதுரை, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வந்து சேர்ந்தனர்.
அவர்களில் பரிசோதனை செய்தவர்கள் பலருக்கு ‘கரோனா’ தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதுபோல், பலருக்கு ‘கரோனா’ தொற்று இல்லை என்றும் பரிசோதனை முடிவுகள் தெரிவித்தன.
ஆனாலும், ஆய்வு முடிவில் இல்லை என்று வந்தாலும் மதுரையில் சிகிச்சைப்பெற்று வந்த 30 பேரை தற்போது வரை பொதுசுகாதாரத்துறை வீட்டிற்கு அனுப்பவில்லை.
அவர்களை மதுரை அருகே தோப்பூர் காசநோய் மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு ‘கரோனா’ சிகிச்சை வார்டில் பொதுசுகாதாரத்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 14 நாட்களுக்கு தொடர்ந்தகண்காணித்து மீண்டும் பரிசோதனை செய்து அதில் இல்லை என்று வந்தால் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.