Published : 03 Apr 2020 09:32 PM
Last Updated : 03 Apr 2020 09:32 PM

கரோனா பரிசோதனை முடிவுகள்; தமிழக அரசு வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை

கரோனா பரிசோதனை முடிவுகள் விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கரோனா தொற்று நோய்க்கு எதிராக பல்வேறு நடவடிக்கை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதற்கு அனைத்து தரப்பிலும் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வரும் சூழலில் திடீரென டெல்லிக்குச் சென்ற தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் பெருமளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பரப்பப்பட்டு வருகின்றது.

தமிழக அரசின் சுகாதாரத்துறையும் டெல்லி சென்று வந்த தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்தவர்களைப் பரிசோதனை செய்ய வலியுறுத்தியது. இதையடுத்து அரசு மற்றும் முஸ்லிம் சமுதாய தலைவர்களின் கோரிக்கையை ஏற்று சுமார் 1104 தப்லீக் ஜமாஅத் அமைப்பினர் தாமாக முன் வந்து பரிசோதனைக்கு ஆஜராகியுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் டெல்லிக்குச் சென்று வந்தவர்களில் கரோனா நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்து வருகின்றது. இவ்வாறு கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது பரிசோதனை அறிக்கை முறையாக அளிக்கப்படவில்லை என்று தெரிய வருகின்றது. மேலும் ஒரு தரப்பு மருத்துவ ஊழியர்கள் உங்களுக்குத் தொற்று இல்லை என்று சொல்ல மற்றொரு தரப்போ இருக்கின்றது என்று சொல்ல மருத்துவமனையில் உள்ளவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு இலக்காகியுள்ளார்கள்.

எனவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். குறைந்த பட்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை அறிக்கையின் நகலை அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படையாக செயல்படாதது மக்களிடையே பெரும் சந்தேகத்தையும் அச்சத்தையும் அளித்துள்ளது.

சில அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்களும் பாதிக்கப்படாதவர்கள் என்று அறிவிக்கப்படாதவர்களும் ஒன்றாகவே இன்றும் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இது எந்த வகையிலும் நியாயமில்லை. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் சில அரசு மருத்துவமனைகளில் மருந்துகளும் அளிக்கப்படவில்லை என்று தெரிய வருகிறது.

மேலும் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு காலவதியான சோதனை தாள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவலும் வருகின்றது. இதுவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கின்றது. இந்த அவல நிலையை நீக்கத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சுத்தம் சரிவரப் பேணப்படவில்லை என்றும், தண்ணீர் மற்றும் கழிவறை வசதி போதுமானதாக இல்லை என்றும் தெரியவருகின்றது.

கரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்யும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சேவை ஊழியர்கள் அனைவருக்கும் தேவையான மருத்துவக் கவசங்களை உடனடியாக ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக வந்தவர்களில் பாசிட்டிவ் என உறுதியானவர்களின் வீடுகளை மட்டும் தனிமைப்படுத்தாமல், அழைத்து வரப்பட்டவர்களின் வீடுகள் இருக்கும் பகுதிகள் முழுவதும் அடைக்கப்பட்டு தேவையற்ற பதட்ட நிலை ஏற்படுத்தப்படுகிறது.

இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றாலும் இதனால் ஏற்படும் பதட்டத்தைத் தணிக்கும் வகையில் இதனை வேறு எந்த வடிவில் நடைமுறைப்படுத்தலாம் என்பதைத் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
எந்தவொரு நோயினால் பாதிக்கப்பட்டவரின் பெயரைப் பகிரங்கமாக வெளியிடுவது சட்ட விரோதமானது. ஆனால் தமிழகத்தில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் முழு விபரங்களுடன் சில மாவட்டங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து உடனடியாக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பரிசோதனைக்காக மருத்துவமனையில் வந்தவர்களுக்கு பரிசோதனை எடுப்பதற்கு முன்பாகவே கரோனா தொற்று இருப்பதாக ஊடகங்கள் சிலவும், சமூக ஊடகங்களில் சமூக விரோதிகள் சிலரும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்று அறிவித்துள்ள தமிழக அரசு இவர்கள் மீதும் கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக அரசு மருத்துவ பரிசோதனைக்கு வந்தவர்களை விரைவாகப் பரிசோதனை செய்து தொற்று உறுதியானவர்களைத் தவிர மற்றவர்களை உடனடியாக வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். உரியப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சமூக தனித்திருப்புக்கான ஏற்பாடுகளை அனைவருக்கும் செய்து தர வேண்டும்.

கரோனா தொடர்பான அரசின் அனைத்து சட்டப்பூர்வமான அறிவிப்புகளுக்கும் கட்டுப்பட்டு உரிய ஒத்துழைப்பை அனைவரும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x