Published : 03 Apr 2020 07:51 PM
Last Updated : 03 Apr 2020 07:51 PM

கரோனா தொற்று எதிரொலி: விளாத்திகுளம் பகுதியில் பனை ஓலை முகக்கவசம் தயாரிக்கும் தம்பதி

கோவில்பட்டி

கரோனா வைரஸ் தொற்று எதிரொலியாக முகக்கவசம் அணிவது அவசியமாகியுள்ள சூழலில், குளத்தூர் சுப்பிரமணியபுரத்தில் பனை தொழில் செய்யும் தம்பதியினர் பனை ஓலை மூலம் முககவசம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

விளாத்திகுளம் அருகே குளத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி முருகலட்சுமி. இவர்கள் இருவரும் பனை தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில நாட்களாக பனைமரம் ஏற செல்ல முடியாமல் பதநீர் இறக்குதல், கருப்புகட்டி தயாரிப்பு தொழில் பாதித்து வாழ்வாதாரம் முடங்கி இருந்தனர்.

இந்நிலையில் விலை கொடுத்து துணி முகக்கவசம் வாங்க முடியாமல் பனை ஓலையை மடக்கி நூலில் கட்டி முகக்கவசம் தயாரித்து அதை முகத்தில் அணிந்து கொண்டு பனை தொழிலுக்கு குணசேகரன், முருகலட்சுமி ஆகியோர் சென்றுள்ளனர். இதனை கிராம மக்களே முதலில் வியப்புடன் பார்த்துள்ளனர்.

இவர்களிடம் பதநீர், கருப்புகட்டி வாங்க வரும் பிற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் இதனை பார்த்து அவர்களும் விரும்பி வாங்கி அணிந்துள்ளனர். இது பரவவே தற்போது தினசரி 100 பனை ஓலை முகக்கவசம் தயாரித்து விற்பனை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பனைத்தொழிலாளி குணசேகரன் கூறும்போது, பனை பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு நலன் தரக்கூடியது தான். பனையில் இருந்து கிடக்கும் பதநீர், நுங்கு, கருப்பு கட்டி, பனங்கிழங்கு என அனைத்து உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது.

தற்போது கரோனா நோய் பரவுவதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியுள்ளது. நாங்கள் வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் முகக்கவசம் கண்டிப்பாக தேவைப்பட்டது.

ஒரு முகக்கவசம் ரூ.15 என்றால், எங்கள் இருவருக்கும் ஒரு நாளைக்கு ரூ.30 தேவைப்பட்டது. பனை பொருளில் கிடைக்கும் வருமானத்தில் பசியாறும் நாங்கள் எப்படி இதனை வாங்க முடியும். அப்போது தான், வேர் முதல் நுனி வரை மனித பயன் தரும் பனை ஓலையில் முகக்கவசம் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியது.

பனை ஓலையில் முகக்கவசம் தயாரித்து அதனை அணிந்து பனைதொழிலுக்கு சென்றோம். இதனை பார்த்து அக்கம்பக்கத்து கிராம மக்கள் ஒரு பனை ஓலை முகக்கவசத்தை ரூ.10 கொடுத்து வாங்கி செல்கின்றனர்.

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் 100 பனை ஓலை முகக்கவசம் வாங்கி சென்றனர். பனை ஓலை முககவசத்துக்கு நல்ல மவுசு உள்ளது, என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x