ஒரே வீடியோ... மாறியது ரேஷன் அரிசி!

ஒரே வீடியோ... மாறியது ரேஷன் அரிசி!
Updated on
1 min read

மதுரை தத்தனேரி அருள்தாஸ் புரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 43). மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி அருகே பிளாட்பாரத்தில் ஜூஸ் கடை நடத்திவரும் இவர், ரேஷன் பொருட்களை வைத்தே வாழ்க்கை நடத்திவருகிறார். இந்த மாதத்துக்கான ரேஷன் அரிசியை அருள்தாஸ்புரத்தில் உள்ள 5-ம் எண் ரேஷன் கடையில் வாங்கிய அவர், அது மிக மோசமாக இருப்பதைப் பார்த்து கவலையடைந்தார். யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் அந்த ரேஷன் அரிசியை வீடியோ எடுத்து, வாட்ஸ் அப்பில் ஒரு வேண்டுகோளுடன் வெளியிட்டார்.

"அரசாங்கம் கேட்டுக்கிட்டதால் நான் வீட்டுக்குள்ளேயே இருக்கேன் சார். அதனால வருமானம் இல்ல. ரேஷன் கடையில அரிசி போடுறாங்கன்னு தெரிஞ்சதும், முதல் ஆளா போய் வரிசையில நின்னு வாங்குனேன். ஆனா, சமைச்சு சாப்பிட முடியாத அளவுக்கு கல், மண், புழு பூச்சின்னு ரொம்ப மோசமா இருக்கு சார். இதை எப்டி சார் நாங்க சமைச்சு சாப்பிட முடியும்?

என்னைய விடுங்க... இந்த நேரத்துல என் பிள்ளைங்க இதைச் சாப்பிட்டுத்தான் கரோனாவுல இருந்து தப்பிக்கணும்னு சொன்னா நியாயமா சார். நான் ஒரு படிக்காத ஜீவன். இந்த வீடியோவைப் பார்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த அரிசியை மாத்திக்கொடுத்து நாங்க வாழ்றதுக்கு வழி பண்ணுங்க சார்" என்று கையெடுத்துக் கும்பிட்டு அந்த வீடியோவில் வேண்டுகோள் விடுத்திருந்தார் நாகராஜ்.

இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. சினிமா இயக்குநர் இரா.சரவணனும் இதைப் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த நடிகரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அந்த வீடியோவை மதுரை மாவட்ட திமுக இளைஞரணியினருக்கு அனுப்பி அந்தப் பெரியவருக்கு திமுக சார்பில் உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

உடனே, மதுரை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மூவேந்திரன், துணை அமைப்பாளர்கள் ஆர்.எம்.அன்புநிதி, அறிவுநிதி மற்றும் திமுக நிர்வாகிகள் நாகராஜின் வீட்டிற்குச் சென்று 50 கிலோ பொன்னி அரிசி, 2 மாதத்துக்கான பலசரக்குப் பொருட்கள், காய்கனிகள் போன்றவற்றை வழங்கினார்கள். மேலும், மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் அவரது மகள் மற்றும் இரண்டு மகன்களின் கல்விக்கு ஏதாவது தேவை என்றால், கூச்சப்படாமல் உதவி கேளுங்கள். நாங்கள் உதவுகிறோம் என்றும் உறுதியளித்துச் சென்றிருக்கிறார்கள்.

ரேஷன் அரிசி விஷயம் அறிந்து மாவட்ட அதிமுக செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ உத்தரவின் பேரில், நாகராஜுக்கு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அந்த அரிசியையும் மாற்றிக்கொடுத்தார்கள் அதிமுகவினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in