

இந்திய கம்யூனிட் கட்சி சிவகங்கை அலுவலகத்தை கரோனா தடுப்பு மருத்துவமனையாக பயன்படுத்தி கொள்ள அக்கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கடிதம் கொடுத்தனர்.
தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கரோனா தடுப்பு மருத்துவனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
இதற்காக காலியாக இருக்கும் அரசு குடியிருப்புகள், ரயில் பெட்டிகளில் கூட சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி, காரைக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டன.
மேலும் காரைக்குடி அமராவதி புதூர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வளாகத்தில் உள்ள 212 குடியிருப்புகளும் மருத்துவமனையாக மாற்றப்பட்டன.
இந்நிலையில் சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் உள்ள மூன்று தளங்களையும் கரோனா தடுப்பு மருத்துவமனையாக பயன்படுத்தி கொள்ளலாம் என அக்கட்சி நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.குணசேகரன், மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் அனுமதி கடிதம் கொடுத்தார்.
மேலும் தங்களது கட்சித் தொண்டர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.