பிரதமரின் உரை அபத்தமானது; கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

கார்த்தி சிதம்பரம்: கோப்புப்படம்
கார்த்தி சிதம்பரம்: கோப்புப்படம்
Updated on
1 min read

பிரதமரின் உரை அபத்தமானது என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இன்று (ஏப்ரல் 3) மாலை நிலவரப்படி 411 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே பிரதமர் மோடி இன்று (மார்ச் 3) காலை 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார். என்ன சொல்லப் போகிறார் என்று பலரும் ஆவலுடன் எதிர்நோக்கினார்கள். ஊரடங்கில் மக்களின் ஒற்றுமையைப் பாராட்டிய பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச்லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த வேண்டுகோள் பலத்த விமர்சனத்துக்குள்ளானது. ப.சிதம்பரத்தைத் தொடர்ந்து அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் இதனை விமர்சித்துள்ளார்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஏப்.3) ஆட்சியரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:

"பிரதமர் மோடி தற்போதைய இக்கட்டான காலகட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிப்பது, பரிசோதனை மேற்கொள்வது, மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பது உள்ளிட்டவற்றைப் பற்றி சொல்லாமல் மூடநம்பிக்கையை வளர்க்கும் வகையில் வருகின்ற 5-ம் தேதி மின் விளக்கை அணைத்து, டார்ச் லைட்டை ஒளிரச் செய்யுமாறு கூறியது அபத்தமாக உள்ளது.

இது, என் தந்தையைப் போன்று எனக்கும் ஏமாற்றம் அளிக்கிறது. இதைக் கேட்டால் விஞ்ஞானிகளும் ஏமாந்து போவார்கள். கரோனா தடுப்புப் பணிகளில் தமிழக அரசு தங்களால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது".

இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in