

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.100-க்கு 11 வகையான காய்கறிகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. மேலும் கதர் கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் கிருமி நாசினி தெளித்தார்.
கரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் அதிகளவில் வெளியில் வருகின்றனர். இதனால் ஊரடங்கு நோக்கமே வீணாகி வருகிறது.
இதையடுத்து காரைக்குடியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் வீடுகளுக்கு நேரடியாக சென்று காய்கறிகள் விநியோகிக்கப்பட உள்ளன. இத்திட்டத்தை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
இதில் ரூ.100-க்கு 11 வகை காய்கறிகள் வழங்கப்படுகின்றன.
ஒரு கிலோ தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, சவ்சவ், முருங்கைக்காய் தலா கால் கிலோ, பச்சைமிளகாய் 100 கிராம், வாழைக்காய் 3, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா வழங்கப்படும். இந்த காய்கறிகள் நகராட்சி வாகனம் மூலம் வீடுகளில் விநியோகிக்கப்படும்.
மேலும் நகராட்சிப் பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிப்பதற்காக 2 இயந்திரங்கள் தலா ரூ.65 ஆயிரத்தில் வாங்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் அமைச்சர் பாஸ்கரன் கிருமி நாசினி மருந்தை நகராட்சி பகுதிகளில் தெளித்தார்.
மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், முன்னாள் எம்பி செந்தில்நாதன், நகராட்சி ஆணையர் மாலதி பங்கேற்றனர்.