Published : 03 Apr 2020 06:49 PM
Last Updated : 03 Apr 2020 06:49 PM

இறங்கிவராத எஸ்டேட் நிர்வாகங்கள்: கரோனா தொற்று அச்சத்தில் தொழிலாளர்கள்

வேலைக்கு வந்தால்தான் சம்பளம் என நீலகிரி தேயிலைத் தொழிலாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நிர்வாகங்கள் பற்றி செய்தி வெளியிட்டிருந்தோம். அப்படியும் மாறாத வால்பாறை தேயிலை எஸ்டேட்டுகள் தங்கள் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி வேலைக்கு வரவழைப்பது சர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது.

எஸ்டேட் நிர்வாகங்களின் இந்த நடவடிக்கையால், வேலை செய்யும் இடத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாமல், பாதுகாப்பு இல்லாமல் எப்போது நமக்குக் கரோனா தொற்று வருமோ என்று பயந்தபடியே வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள். இது தொடர்பாக, தாசில்தார் முதல் ஆட்சியர் வரை புகார் செய்தும் எந்தப் பயனும் இல்லை என்று புலம்புகின்றனர் வால்பாறையில் உள்ள தேயிலைத் தொழிலாளர் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள்.

1 லட்சம் தொழிலாளர்கள்
கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 58 தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. அவற்றில் சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் எஸ்டேட் குடியிருப்புகளில் தங்கிப் பணிபுரிகிறார்கள். இவர்களில் 10 ஆயிரம் பேர் வரை வட இந்தியர்கள். பிரதமர் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததிலிருந்து இவர்கள் வேலையில்லாமல் குடியிருப்புகளில்தான் இருந்தனர். இந்நிலையில், நான்கு நாட்கள் முன்பு உப்பிரியார் எஸ்டேட் மற்றும் பெரிய கருமலை எஸ்டேட் நிர்வாகங்கள் தங்களது தொழிலாளர்களைப் பணிக்கு வரும்படி பணித்திருக்கிறது.

இந்த எஸ்டேட்டில் மட்டும் சிறுகுன்றா, மாணிக்கா, ஸ்டேன்மேர், புதுத்தோட்டம், நல்லகாத்து, இஞ்சிப்பாறை, குரங்குமுடி, முருகன், சவரங்காடு என நிறைய டிவிஷன்கள் உள்ளன. இதேபோல் பெரிய கருமலையில் அக்கமாலை, கருமலை, காஞ்சமலை, ஊசி மலை, வெள்ளை மலை என பல்வேறு டிவிஷன்கள் உள்ளன. இந்த டிவிஷன்கள் ஒவ்வொன்றிலும் தலா சுமார் 250 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

நிர்வாகத்தை ஆதரிக்கும் தொழிற்சங்கங்கள்
கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, இந்தத் தொழிலாளர்கள் யாரும் பணிக்குச் செல்ல தயாராக இல்லை. ஆனால், சில தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன.

“நீங்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது. சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் சாக வேண்டியதுதான். இப்போதுகூட நாங்கள் பேசியதால்தான் இந்த எஸ்டேட் நிர்வாகங்கள் இரக்கப்பட்டு உங்களை வேலை செய்ய அனுமதிக்கின்றன. நீங்கள் வேலைக்கு வரும்போது, ‘எங்களுக்குப் பணி வாய்ப்பு இல்லை. கஷ்ட ஜீவனத்தில் உள்ளோம். எங்கள் சொந்தப் பொறுப்பில் பாதுகாப்பு முகக் கவசங்களை, கையுறைகளை மாட்டிக்கொண்டு வேலை செய்கிறோம். எனவே, எங்களுக்கு வேலை தந்து உதவ வேண்டும்’ என தனித்தனியே எழுதிக் கொடுத்துவிட்டு வர வேண்டும்” என்றும் அந்தத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் சொல்லியிருக்கின்றனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த தொழிலாளர்கள் பலர் நேற்று முன்தினம் முதலே பணிக்குத் திரும்பியிருக்கின்றனர். ஆனால், இவர்கள் பணிபுரியும் இடத்தில் 1.5 மீட்டர் இடைவெளி கடைப்பிடிக்கப் படவில்லை. அதைவிடக் கொடுமை, முகக்கவசம், கையுறை எதுவுமில்லாமல் வேலை பார்த்திருக்கின்றனர். இதைப் பார்த்த மற்ற எஸ்டேட்டைச் சேர்ந்த தொழிற்சங்கவாதிகள் விசாரிக்கவே, விவகாரம் வெளியே வந்திருக்கிறது.

கைவிரித்த அதிகாரவர்க்கம்
கொந்தளித்துப்போன மற்ற கம்பெனிகளில் செயல்படும் தொழிற்சங்கங்கத்தினர், உள்ளூர் தாசில்தார் முதல் துணை ஆட்சியர் வரை புகாரைக் கொண்டு சென்றுள்ளனர். அவர்களோ, ‘இது முழுக்க விவசாயம் சார்ந்த தொழில். அத்தியாவசியப் பண்டங்கள் பட்டியலில் வருவது. நாங்கள் தடுக்க முடியாது’ என்று கைவிரித்துவிட்டனர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடமே புகார் சென்றது. பணியாளர்கள் பணிபுரியும் இடத்தில் சமூக விலக்கத்தைக் கடைப்பிடிக்கவும், விதிமுறைகளை அமல்படுத்தவும் உள்ளூர் தாசில்தாரை விட்டு நடவடிக்கை எடுப்பதாகவும் ஆட்சியர் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், நடந்ததோ தலைகீழ். ஆட்சியர் தலையிட்டதைப் பார்த்துவிட்டு, மேற்சொன்ன இரண்டு எஸ்டேட்டுகள் மட்டுமின்றி மற்ற எஸ்டேட்டுகளும் தொழிலாளர்களை வேலைக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்த ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் வாட்டர் ஃபால், என்இபிசி, சின்கோனா (அரசுக்குச் சொந்தமான டேன் டீ) பெரிய கல்லார், சின்னகல்லார், ரேயான் இரண்டு டிவிஷன், பிபிடிசி, முடீஸ், கஜமுடி, முத்துமுடி, ஆனை முடி, நல்லமுடி, தாய்முடி, ஜெயஸ்ரீ, சோலயாறு, ஈட்டியாறு, கல்லாறு என சகல எஸ்டேட்டுகளும் நெருக்குதல்களைத் தந்ததால், வேறு வழியின்றி தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றுவிட்டனர்.

கரோனா பீதி
இந்தச் சூழலில், எஸ்டேட் பணிக்குத் திரும்பிய பெண் ஒருவர் சொன்ன தகவல், அவர் பணி செய்த டிவிஷனைச் சேர்ந்த சக தொழிலாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது கணவர் கேரளா சென்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை எடுத்ததாகவும், அவரும் தானும் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்ததாகவும் சொன்ன அந்தப் பெண், எஸ்டேட் நிர்வாகம் கட்டாயப்படுத்தியதால், தான் மட்டும் வேலைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். பதறிப்போன தொழிலாளர்கள், இந்த விஷயத்தை நிர்வாகத்திடம் தெரிவிக்க, அந்தப் பெண் வெளியேற்றப் பட்டிருக்கிறார்.

எனினும், ‘நமக்கும் கரோனா வந்திருக்குமோ?’ என்ற அச்சம் தொழிலாளர்களுக்கு உருவாகியிருக்கிறது. எங்களுக்குத் தகுந்த பாதுகாப்பு இல்லை என பல டிவிஷன்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் போராட்டம் செய்துள்ளனர். ஒரு பிரிவினர் வால்பாறையில் மறியலும் நடத்தியுள்ளனர். என்றாலும் நிர்வாகங்கள் அசைந்து கொடுக்கவில்லை. தொடர்ந்து அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இதைப் பற்றி வால்பாறையைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர் சங்க நிர்வாகி வெங்கட் நம்மிடம் பேசும்போது, “சில சங்கங்கள் பணத்தை வாங்கிக்கொண்டு நிர்வாகங்களுக்குச் சாதகமாகச் செயல்படுகின்றன. அவர்களுக்குத் தொழிலாளர்களை பற்றிக் கவலையே இல்லை. எங்களைப் போன்ற ஒன்றிரண்டு தொழிற்சங்கங்கள்தான், தொழிலாளர்களின் உயிர் முக்கியம், அவர்களின் பாதுகாப்பு முக்கியம் எனப் போராடுகின்றன. இதை ஆட்சியர் வரை கொண்டு சென்றோம். நடவடிக்கை எடுக்கிறோம் என்றார்கள். ஆனால், இதுவரை எஸ்டேட்டில் ஒன்றரை மீட்டர் இடைவெளிகூட கடைப்பிடிக்கப்படுவதில்லை.

பல எஸ்டேட்டுகள் கேரள எல்லையோரம் இருப்பவை. அங்குள்ள தொழிலாளர்கள் இங்கும் வருகிறார்கள். வட இந்தியர்களும் கலந்தே இருக்கிறார்கள். இந்தச் சூழலில், கரோனா தொற்று யாரிடமிருந்து எப்படி யாருக்குப் பரவுமோ என்ற அச்சமாக இருக்கிறது. எனவே, இனியும் உள்ளூர் அதிகாரிகளை நம்பிப் பயனில்லை என முதல்வருக்கும், பிரதமருக்கும் புகார் அனுப்ப முடிவு செய்துள்ளோம்” என்றார்.

இந்தப் பிரச்சினையில் இனியாவது அரசு தலையிடுமா என்பதுதான் தொழிலாளர்களிடம் எஞ்சியிருக்கும் கேள்வி!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x