துணை முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் திரண்ட கூட்டம்!- காற்றில் பறக்கவிடப்பட்ட சமூக இடைவெளி கட்டுப்பாடு

துணை முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் திரண்ட கூட்டம்!- காற்றில் பறக்கவிடப்பட்ட சமூக இடைவெளி கட்டுப்பாடு
Updated on
1 min read

தேனி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்கள் 4,346 பேருக்கு மாவட்ட அதிமுக சார்பில் தலா 1,000 ரூபாய் நிதி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் பணியை மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான், ரவீந்திரநாத் குமார் எம்.பி. ஆகியோரது முன்னிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ் தொடங்கி வைத்தார்.

இதேபோல, எம்.பி. நிதியில் இருந்து வாங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதிலும் துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்றார். ரவீந்திரநாத் குமார், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினரும் கலந்துகொண்டார்கள்.

செய்தி அறிக்கை அனுப்பிவிடுங்கள் என்று பல பத்திரிகையாளர்கள் கேட்டுக்கொண்ட போதிலும், துணை முதல்வர் பங்கேற்கிறார், முக்கியமான விஷயம் பேசப்போகிறார் என்று சொல்லி அத்தனை பத்திரிகையாளர்களையும் நிகழ்ச்சிக்கு வரவழைத்தார்கள் கட்சியினர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் கூட்டம் கூடியது. சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை.

கரோனா தடுப்புக்கான நிகழ்ச்சியே அந்நோய் பரவ வழி செய்து கொடுப்பது போல ஆகிவிட்டது. இது சுகாதாரத் துறை அதிகாரிகளை முகம் சுளிக்க வைத்தது. ஏற்கெனவே நேற்று தேனியில் வீடு தேடிவரும் மளிகைப் பொருட்கள் திட்டத் தொடக்க நிகழ்விலும் இதேபோல கூட்டம் கூடியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in