தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சிகள் நிறுத்தம்: கடலோர மாவட்ட நேயர்கள் ஏமாற்றம்

தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சிகள் நிறுத்தம்: கடலோர மாவட்ட நேயர்கள் ஏமாற்றம்
Updated on
1 min read

ஊரடங்கு உத்தரவு காரணமாக தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டிருப்பது தமிழக கடலோர மாவட்ட நேயர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

எனவே, இந்த வானொலி நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என நேயர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வெளியே நடமாடாமல் வீடுகளுக்கு உள்ளேயே தனிமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் முடங்கி கிடக்கும் மக்கள் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் தங்களது நேரத்தை செலவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளை பிரசார் பாரதி கடந்த 10 நாட்களாக நிறுத்தி வைத்துள்ளது.

இதனால் இந்த வானொலி நிகழ்ச்சிகளை தினமும் கேட்கும் தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்ட நேயர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே, தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சிகளை உடனே மீண்டும் தொடங்க வேண்டும் என நேயர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தூத்துக்குடி நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நடுவம் செயல் இயக்குநர் ஆ.சங்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில், தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையமானது, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான சிறப்பு ஒலிபரப்பு வானொலி நிலையமாக இருந்த போதிலும், இதன் நிகழ்ச்சிகளை தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்ட மக்களும் கேட்டு வருகின்றனர்.

கஜா புயல் போன்ற பல்வேறு இயற்கை சீற்ற நிகழ்வுகளின் போது கடலோர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக தூத்துக்குடி வானொலி நிலையம் செயல்பட்டுள்ளது.

மேலும், பிரதமரின் மான் கி பாத் நிகழ்ச்சியை இந்த வானொலி நிலையம் மூலம் ஏராளமான நேயர்கள் மாதம் தோறும் கேட்பார்கள். எனவே, தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சிகளை மீண்டும் உடனடியாக தொடங்க வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in