

தேனி மாவட்டத்தின் பல கிராமங்களில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதன் எல்லைகள் அடைக்கப்பட்டு வருகின்றன.
தேனி மாவட்டத்தில் இதுவரை 20 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலருக்கும் இது தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இ
ந்நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் பொதுமக்கள் சமூகவிலகலை பின்பற்றும் நிலை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கடந்த சில நாட்களாக கிராம எல்லைகளை மூடி தங்களை தற்காத்துக் கொள்ளும் நிலை உருவாகி வருகிறது.
ஆண்டிபட்டி அருகே ராஜகோபாலன்பட்டிஊராட்சியில் உள்ள சிலுக்குவார்பட்டி, சேடபட்டி, ரங்கநாதபுரம், முத்துகிருஷ்ணாபுரம், லட்சுமிபுரம், சத்தியாநகர் மற்றும் ரெங்கநாதபுரம், நாச்சியார்புரம், ரெங்கசமுத்திரம் உள்ளிட்ட பல கிராமங்கள் தங்கள் எல்லையை அடைத்துள்ளன.
இது குறித்து ராஜகோபாலன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் வேல்மணிபாண்டியன் கூறுகையில், உள்ளூரிலேயே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிவு செய்துள்ளோம்.
பொருட்கள் தேவைப்பட்டால் வெளியூரில் சென்று வாங்கி வர 3 குழுக்களை நியமித்துள்ளோம். கிராமத்தின் 5 பாதைகளும் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளன என்றார்.