

ராமநாதபுரம் மாவட்டத்தில் டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்களின் வீடுகளைச் சுற்றியுள்ள 35,000 குடும்பங்கள் தொடர் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டிற்குச் சென்றவர்கள் நேற்றுவரை 41 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
அவர்களில் 25 பேர் மாவட்டத்திற்கு திரும்பியுள்ளனர். மீதியுள்ளவர்களில் 14 பேர் டெல்லியிலும், 2 பேர் சென்னையிலும் தங்கியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
திரும்பி வந்தவர்களுக்கான கரோனா பரிசோதனையில் பரமக்குடியைச் சேர்ந்த 2 பேருக்கு மட்டும் கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் 15 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மீதியுள்ள 8 பேருக்கு கரோனா பரிசோதனைக்கு மாதிரிகள்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்று உறுதியான இருவரது குடும்பங்கள் மட்டுமின்றி, டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்தவர்களின் குடும்ப உறுப்பினர் 113 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மாநாட்டிற்குச் சென்று திரும்பிய 25 பேரின் வீடுகளைச் சுற்றி 5 கி.மீட்டர் சுற்றளவில் உள்ள 35,000 குடும்பங்கள் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இவர்களுக்கு 14 நாட்கள் மருத்துவ சோதனை செய்யப்படும். மாவட்டத்தில் 440 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சைப் பிரிவு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திரும்பிய 4,777 பேரில் 2,309 பேர் ஒரு மாதம் தனிமைப்படுத்துதல் காலம் முடிந்து , கரோனா தொற்று இல்லாமல் நலமாக உள்ளனர்.
மீதியுள்ள 2,468 பேர் அவர்களது குடும்பத்தாருடன் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிய ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 761 பேர் பொதுக்கட்டிடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். என ஆட்சியர் தெரிவித்தார்.