

தூத்துக்குடியில் நேற்று முதல் நாளில் 72,200 குடும்ப அட்டைகளுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி அருகே துரைசாமிபுரத்தில் உள்ள பகுதிநேர நியாயவிலைக் கடையில் தமிழக அரசின் கரோனா நிவாரணத் தொகை ரூ.1000 மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான விலையில்லா பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ பொதுமக்களுக்கு வழங்கி ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, கூட்டுறவு துணை பதிவாளர் ஜெயசீலன், வட்டாட்சியர் மணிகண்டன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி, வட்ட வழங்கல் அலுவலர் சுப்புலட்சுமி, சார் பதிவாளர் முருகவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதே போல், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 7 குடும்பத்தினர் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் தங்கி, கூலித்தொழிலாளி செய்து வருகின்றனர்.
ஊராடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு அரிசு, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள், காய்கறிகள் வழங்க ஊராட்சி மன்ற தலைவர் கடல்ராணி அந்தோணிராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.
அதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ கர்நாடகாவைச் சேர்ந்த 7 குடும்பங்களுக்கும் வழங்கினார். மேலும், தனது சொந்த நிதியில் இருந்து குடும்பத்துக்கு தலா ரூ.ஆயிரமும் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 957 நியாயவிலைக் கடைகளில் நேற்று முதல் நிவாரண தொகை மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான விலையில்லா பொருட்கள் வழங்கும் பணி நடந்து வருகிறது.
மாவட்டத்தில் 4,80,602 குடும்பஅட்டைகள் உள்ளன. முதல்நாளான நேற்று 72,200 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் முறையில் நிவாரண தொகை மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் 5 பேர் கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 5 பேரும் டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள்.
மேலும் நோய் பரவலை தடுக்க அவர்கள் வசித்த பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் சுய ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்கும் நேரத்தில் அவர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு ஒவ்வொரு நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது.
அமைப்புசாரா தொழிலாளர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கரோனா நிவாரண தொகை வழங்கப்படுகிறது. தொடர் நிகழ்வின் அடிப்படையல் கரோனா நிவாரணத்தொகையை உயர்த்துவது குறித்து அரசு முடிவு செய்யும், என்றார் அவர்.