கரோனா தொற்றுத் தடுப்பில் கைதிகளின் பணி: முகக் கவசங்கள் தயாரிப்பில் தீவிரம்

கரோனா தொற்றுத் தடுப்பில் கைதிகளின் பணி: முகக் கவசங்கள் தயாரிப்பில் தீவிரம்
Updated on
1 min read

கரோனா தொற்றுத் தடுப்புப் பணியில் சிறைக்கைதிகள் தங்கள் பங்களிப்பைச் செலுத்தி வருகின்றனர். தமிழக சிறைகளில் உள்ள கைதிகள் ஒன்றுசேர்ந்து முகக்கவசம் தயாரித்து வருகின்றனர். நாளொன்றுக்கு 30 ஆயிரம் முகக் கவசங்களைத் தயாரிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணியில் தமிழக அரசின் அனைத்துத் துறைகளும் இறங்கி முனைப்புடன் பணியாற்றி வருகின்றன. இதில் முக்கியத் துறையான காவல்துறையினரின் பணி சிறப்பாக உள்ளது. சென்னையில் காவலர்களுக்கு தினசரி வழங்கப்படும் முகக்கவசம், சானிடைசர் திரவத்தை ஆயுதப்படைக் காவலர்களே தயாரித்து காவலர்களுக்கு வழங்குகின்றனர். இதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் போலீஸாரே தயாரிக்கின்றனர்.

சிறையில் உள்ள கைதிகள் பலரும் பல கைத்தொழில்கள் செய்து வருவார்கள். அவர்கள் தயாரித்த பொருட்கள் வெளிச்சந்தையிலும் விற்பனைக்கு வரும். தற்போது பேரிடர் நேரத்தில் சிறைக்கைதிகளும் தங்களாலான பங்கைச் செய்துள்ளனர்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக அனைவரும் முகக்கவசம் அணிவதால் அதற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக சிறைகளில் தையல் பயிற்சி பெற்ற சுமார் 200 தண்டனைக் கைதிகள் மூலம் முகக் கவசங்களைத் தயாரிக்கும் பணியை சிறைத்துறை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.

துணிகளை மொத்தமாக வாங்கி சிறைக்குள்ளேயே முகக்கவசம் தயாரிக்கப்படுகிறது. இதில் ஒரே நாளில் 30 ஆயிரம் முகக் கவசங்களை சிறைக்கைதிகள் தயாரிக்கின்றனர். இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் முகக் கவசங்களை சிறைக்கைதிகள் தயாரித்துள்ளனர். இந்த முகக் கவசங்களை தமிழக சிறையில் உள்ள காவலர்கள், தமிழக காவல்துறையில் உள்ள காவலர்கள், சிறைக்கைதிகள் அனைவரும் பயன்படுத்துகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in