

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள எட்டயபுரம் அருகே ராமனூத்து கிராமத்தைச் சேர்ந்த 25 ஏழை, எளிய குடும்பங்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மளிகைப் பொருட்களை வழங்கினார்.
எட்டயபுரம் அருகே உள்ள ராமனூத்து கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இதில், பெரும்பாலானோர் விவசாய தொழிலாளர்கள். சிலர் எட்டயபுரத்துக்கு சென்று கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
தற்போது கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அமலில் உள்ள ஊரங்கு உத்தரவால் கிராமங்களில் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
இதில் ராமனூத்து கிராமத்தில் 25 குடும்பங்கள் மிகவும் வறுமையில் எந்தவித வருமானமும் இன்றி தவித்து வந்தனர்.
இதனை ராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் மு.க.இப்ராஹிம் தனது பள்ளி மாணவர்கள் மூலம் தெரிந்து கொண்டுள்ளார்.
உடனடியாக ராமனூத்து கிராமத்தில் உள்ள 25 ஏழை குடும்பங்களுக்கும் தலா ரூ.600 மதிப்பிலான சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களை தனது சொந்த செலவில் வாங்கி வீடு வீடாக நேரில் சென்று வழங்கியுள்ளார்.
இந்த தகவல் ராமனூத்து மற்றும் அருகாமை கிராமங்களுக்கு பரவவே ஆசிரியர் மு.க.இப்ராஹிமுக்கு ஏராளமான பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
இதுகுறித்து ஆசிரியர் மு.க. இப்ராஹிம் கூறுகையில், நான் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவன். அதனால் அடித்தட்டு மக்களின் கஷ்டத்தை புரிய முடிந்தது. நாம் எவ்வளவோ செலவு செய்கிறோம்.
ஆனால், கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு உதவும் போது தான் நிம்மதி கிடைக்கிறது. அதுமட்டுமின்றி ஆசிரியர் பணி என்பது எழுத்தறிவிப்பது மட்டுமல்ல இதுபோன்ற இன்னல்களில் உதவிக்கரம் நீட்டுவதும் முக்கியமான கடமை, என்றார்.