

கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த நேரத்தில் தற்கொலை செய்துகொண்ட கூலித் தொழிலாளி ஒருவரின் குடும்பம், அவருக்கு இறுதிச் சடங்கு செய்யக்கூட வழியின்றி தவித்த நிலையில் காவலர் ஒருவர் தனது சொந்தப் பணத்தைக் கொடுத்து இறுதிச் சடங்குக்கு உதவிய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த செங்கல்சூளை தொழிலும் கரோனா ஊரடங்கு உத்தரவினால் முடங்கிக் கிடக்கிறது. இதனால் அந்த வருமானத்தையே நம்பியிருக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
அப்படி செங்கல் சூளையில் வேலைசெய்து வந்த ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த வேலு (41) என்பவரும் தொழில் முடக்கம் ஏற்பட்டு வீட்டிலேயே இருந்தார். இந்த நிலையில், வீட்டில் மனைவியுடன் எழுந்த கருத்து வேறுபாட்டால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் வேலு.
இந்தத் தகவலைக் கேள்விப்பட்டதும் ஆரல்வாய்மொழி காவல் உதவி ஆய்வாளர் ராபர்ட் செல்வசிங் அதுகுறித்த விசாரணைக்காக வேலுவின் வீட்டுக்குப் போயிருக்கிறார். அங்கு போன பிறகுதான் வேலுவின் இறுதிச் சடங்குக்குக்கூட பணம் இல்லாமல் அந்தக் குடும்பம் இருந்தது தெரியவந்தது.
இதைப் பார்த்துப் பரிதாபப்பட்ட உதவி ஆய்வாளர் ராபர்ட், அப்போதே அருகிலுள்ள ஏடிஎம் சென்று ஐயாயிரம் ரூபாயை எடுத்து வந்து வேலுவின் இறுதிச் சடங்குக்காக அவரது மனைவியிடம் கொடுத்திருக்கிறார்.
ராபர்ட்டின் இத்தகைய மனிதாபிமானம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது. இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்துக்குத் தெரியவர, ராபர்ட் செல்வசிங்கைப் பாராட்டியதுடன் இந்தச் செய்தியை குமரி மாவட்ட காவல்துறையின் சமூக வலைதளப் பக்கங்களிலும் பதிவிட்டுள்ளார்.