

சிவகங்கை மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பதாக உறுதியான நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
புதுடெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த 3 பேர், தேவகோட்டை , இளையான்குடியைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து திருப்பத்தூரில் கரோனா தொற்று உள்ளவர்கள் வசித்த அச்சுக்கட்டு, புதுத்தெரு ஆகிய பகுதிகளை யாரும் நடமாட முடியாதபடி போலீஸார் சீல் வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளை மூடவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் அந்த உத்தரவை ரத்து செய்து கடைகளை திறக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த அதிகாரிகள் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை கைவிட்டனர்.
இதேபோல் இளையான்குடி மல்லிப்பட்டணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் உள்ள சாலையில் தடுப்பு வைக்க உள்ளூர் போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். தடுப்பு வைக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதால் தடுப்பு வைப்பதை கைவிட்டனர்.
இதேபோல் தேவகோட்டையிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசித்த பகுதியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசித்த பகுதிகளை சுற்றிலும் ‘சீல்’ வைக்க வேண்டும்.
அப்பகுதிகளில் குடியிருப்போரை தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்பில் வைக்க வேண்டும். மேலும் அப்பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகளையும் மூடி மக்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும்.
மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை நேரடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இதுபோன்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படாமல் மாவட்ட நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.