Published : 03 Apr 2020 03:42 PM
Last Updated : 03 Apr 2020 03:42 PM

தமிழகத்தில் கரோனா தடுப்பு மாவட்ட மைய அலுவலர்கள் நியமனம்: சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவக் கல்லூரி டீன் பணிகளை ஒருங்கிணைப்பார்கள்

‘கரோனா’ தொற்று நோயைத் தடுக்க, மாவட்டங்கள் தோறும் மருத்துவக் கல்லூரி ‘டீன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு ஆலோசனை கூற ‘கரோனா’ தடுப்பு மாவட்ட மைய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ‘கரோனா’ வைரஸ் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெறுகின்றனர்.

மேலும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் நோய் அறிகுறியுடன் கண்காணிக்கப்படுகின்றனர். இதற்கு முன் இதுபோன்ற தொற்று நோய்கள் பரவினாலும், அதற்கான மருந்துகள் இருந்ததால் அந்த நோய்கள் கட்டுப்படுத்தக் கூடியநிலையிலே இருந்தது.

ஆனால், ‘கரோனா’ வைரஸ் காய்ச்சல் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு வேகமாகப் பரவுவதோடு, அதற்கான சிகிச்சை மருந்தும், வசதிகளும், பாதுகாப்பு கவசங்களும் இல்லாததால் ஒட்டுமொத்த மருத்துவத்துறையே கலங்கிப்போய் நிற்கிறது.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் அந்தந்த மாவட்ட பொதுசுகாதாரத்துறை இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், மருத்துவக்கல்லூரி ‘டீன்’கள், ‘கரோனா’ தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், பல மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி ‘டீன்’கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ‘கரோனா’ சிகிச்சைப் பணிகளில் தடுமாறுகின்றனர்.

அவர்கள் இதற்கு முன் குறைந்தப்பட்சம் ‘டெங்கு’ போன்ற அசாதாரண நிலையை கூட கையாளததால் அவர்களால் ‘கரோனா’ தொற்று நோயாளிகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை கிடைக்கவும், ரத்தப் பரிசாதனை செய்து புதிய நோயாளிகளை கண்டறியவும் முடியவில்லை.

குறிப்பாக மதுரை மாவட்டத்தில் இந்த தொற்று நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனை மையம் உருவாக்கப்பட்டும், அதற்கான மருத்துவ உபகரணங்கள் இன்னும் வரவில்லை. அதனால், நோயாளிகளின் ரத்த மாதிரிகள் தேனி பரிசோதனை மையத்திற்கு அனுப்பி அங்கு இருந்து முடிவுகள் வர வேண்டி உள்ளது.

இந்த குறைபாடுகளைக் கூட அரசு கவனத்திற்கு எடுத்த சொல்லத் தெரியாமல் மதுரை அரசு மருத்துவக்கல்லூரியும் சுகாதாரத்துறையும் திணறி வருகிறது.

அதனால், தமிழக அரசு, மாவட்டங்கள் தோறும் ‘கரோனா’ தொற்று நோய் தடுப்புப் பணிக்கு மாவட்ட மைய அலுவலர்களை நியமித்து வருகிறது.

முதற்கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் மதுரை மாவட்டத்திற்கு ஒய்வு பெற்ற அரசு மருத்துவக்கல்லூரி ‘டீன்’களை 3 மாதத்திற்கு மாவட்ட மைய அலுவலர்களாக நியமித்துள்ளது.

மதுரை மாவட்ட மைய அலுவலராக முன்னாள் அரசு ராஜாஜி மருத்துவமனை ‘டீன்’ மருதுபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கெனவே மதுரையில் ‘டெங்கு’ நோய் சிகிச்சை பணியில் சிறப்பாக செயல்பட்டவர்.

2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவரது காலக்கட்டத்தில் ஒரு சில உயிரிழப்பைத் தவிர மற்றவர்களைக் குணப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

மேலும், குரங்கணி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வார்டு உருவாக்கி சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டு பெற்றவர்.

அதனால், தற்போது இவர் ‘கரோனா’ தடுப்பணிக்கு மதுரை மாவட்ட மைய அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரைப்போல் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஒய்வுபெற்ற ‘டீன்’ லலிதாவும், திருநெல்வேலியில் ஒய்வு பெற்ற டாக்டர் கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி டீன், இணை இயக்குனர், துணை இயக்குனர் ஆகியோர் பணிகளை ஒருங்கிணைந்து பிரச்சனை இருந்தால் அதை தீர்க்க ஆலோசனை கூறுவார்கள்.

அரசுக்கு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, தேவையான வசதிகள், அதன் விவரம் உள்ளிட்டவற்றை அறிக்கை அனுப்புவார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x