Published : 03 Apr 2020 03:32 PM
Last Updated : 03 Apr 2020 03:32 PM

கரோனா தடுப்பு: விளக்கு ஏற்றச் சொல்வதற்கு என்ன அறிவியல் காரணங்கள் இருக்கின்றன? - இரா.முத்தரசன் கேள்வி

முத்தரசன்: கோப்புப்படம்

சென்னை

கரோனா தடுப்புக்கு அறிவியல்பூர்வமாக செயல்பட வேண்டும் என, மத்திய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஏப்.3) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருவதைத் தடுக்க நாடு முழுவதும் முடக்கப்பட்டு 10 நாட்கள் ஆகின்றன. இன்னும் 11 நாட்களை கடந்து செல்ல வேண்டும்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி வழியாக மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளார். இதன்பிறகு பிரதமர் வெளியிட்டுள்ள காட்சி ஊடகச் செய்தியில் "வரும் 5-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும், அவரவர் வீடுகளில் உள்ள விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு, வீட்டு வாசலில் விளக்கு ஏற்றி 9 நிமிடம் எரிய விட வேண்டும். வீடு வாசல் இல்லாதோர் தெருவில் நின்று அலைபேசியில் உள்ள 'டார்ச் லைட்'டை எரிய விட வேண்டும். இதுவும் இல்லாதோர் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று நோய் பரவலுக்கும், அதன் தடுப்பு நடவடிக்கைகளுக்கும், பிரதமர் விளக்கு ஏற்றச் சொல்லி இருப்பதற்கும் என்ன அறிவியல் காரணங்கள் இருக்கின்றன என்பதை பிரதமர் விளக்கியிருக்க வேண்டும்.

முன்னதாக, மக்கள் ஊரடங்கு தினத்தில் கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களை ஊக்கப்படுத்த கைதட்டுமாறு கேட்டுக்கொண்டார்.
அப்போது, மருத்துவர்கள் எங்கள் மருத்துவ சேவைக்குத் தேவையான கருவிகளையும், மருந்துகளையும் வழங்குங்கள். அவைகள் தான் உடனடித் தேவையாகும். கைத்தட்டல் அல்ல என்று கூறினார்கள்.

கரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வரும் சங்கிலித் தொடரைத் துண்டிக்க சமூக இடைவெளி நிறுத்தல் நடவடிக்கை அவசியம் என்பதால் நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கப்படும் என பிரதமர் தொலைக்காட்சியில் அறிவித்தார்.

இந்த முடக்க காலத்தில் நாட்டு மக்களில் 10 சதவீதம் பேர் குடிசைகளில் வசிக்கிறார்கள். புலம் பெயர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் தெருவில் தூங்குகிறார்கள். மொத்தத் தொழிலாளர் எண்ணிக்கையில் 93 சதவீதம் பேர் எந்த சட்டப் பாதுகாப்பும், சமூக உதவிகளும் இல்லாத அமைப்புசாராத் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். இந்தப் பெரும் பகுதியினர் அன்றாடம் உயிர் வாழ உணவுக்கு அலைந்து திரியும் அவல நிலையில் வாழ்கிறார்கள்.

பட்டினி நிலை வாழ்க்கை வாழும் இவர்கள் நாடு முழுவதும் முடக்கப்படும் காலத்தில் உணவுக்கு என்ன செய்வார்கள்? இவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் எப்படி வழங்குவது? கரோனா நோய் தொற்று தடுப்பு கருவிகள் மருந்துகள் எங்கே பெறுவார்கள்? போன்ற கேள்விகள் பிரதமரின் அறிவார்ந்த சிந்தனையில் ஏன் எழவில்லை.

கடுமையான கட்டுப்பாடு அவசியம் என்பதை மக்கள் உணரவில்லை என்று அங்கலாய்த்துக் கொள்ளும் பிரதமர், கரோனா நோய் தொற்று தடுப்புக்கு மக்கள் பட்டினி கிடந்து சாவது பரிகாரம் ஆகாது என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பட்டினி கிடக்கும் மக்களிடம் ஆன்மீக போதனைகள் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். அவர்களுக்கு ஒரு ரொட்டி துண்டு கொடுங்கள் போதும் என்று தான் மகான்கள் கூறியுள்ளனர்.

ஆரோக்கிய வாழ்வின் பேரிடரான கரோனா வைரஸ் நோய் தொற்று மக்களிடம் உருவாக்கியுள்ள அச்சம், பயம் போன்ற உணர்வுகளைப் பயன்படுத்தி 'கைத்தட்டுங்கள்', 'விளக்கு ஏற்றுங்கள்' என்று மக்களின் உணர்ச்சிகளை உசுப்பித் தூண்டி திசைத்திருப்பும் மலிவான செயலில் ஈடுபடுவதை நாட்டின் பிரதமர் உடனடியாக கைவிட வேண்டும்.

கோடை பருவத்தில் அறுவடை செய்யும் நோக்கில் தர்பூசணி, பன்னீர் திராட்சை பயிர் செய்த விவசாயிகள் முடக்க காலத்தில் வயலில் அழுகும் நிலை கண்டு கண்ணீர் வடித்து வருகிறார்கள். வாழை, பலா சாகுபடி செய்த விவசாயிகள் முதிர்ந்த பழத் தார்களையும் பழங்களையும் வெட்டி, சந்தைக்கு அனுப்ப வழியின்றி செத்து வருகிறார்கள். மலர்கள் சாகுபடி செய்த விவசாயிகள் வயலில் உதிர்வதை கண்டு அதிர்ந்தது வருகிறார்கள்.

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களின் வசூலை மூன்று மாதம் தள்ளி வைத்திருப்பதாக திரும்பத் திரும்ப அறிவிக்கப்படுகிறது. ஆனால் வங்கிகள் வசூல் வேட்டையில் கவனமாக செயல்படுகின்றன.

தனியார், கார்ப்பரேட் மருத்துவமனைகள் கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்புக்கு உதவ மறுத்து, பொது மருத்துவ சிகிச்சை அளிப்பதையும் நிறுத்தி விட்டன. இதனால் மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மாநில அரசுகளுக்கு கரோனா நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பான உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பித்து வரும் பிரதமர் மாநில முதல்வர்கள் கோரியுள்ள பேரிடர் கால நிவாரண நிதி வழங்க அக்கறை காட்டவில்லை என்பதை மக்கள் அனைவரும் அறிந்துள்ளனர்.

மக்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்" என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x