

கிராம ஊராட்சிப் பணியாளர்களுக்கு வழங்குவதற்காக விருதுநகரில் மகளிர் கூட்டமைப்பு சார்பில் நாள் ஒன்றுக்கு சுமார் 8 ஆயிரம் மாஸ்க்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் குழுக்களில் தையல் தெரிந்த பெண்களை ஒருங்கிணைத்து மாஸ்க் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது கரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் மாக்ஸ் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. அதை சமாளிக்கும் வகையிலும் அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மாஸ்க் தட்டுப்பாடின்றிக் கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, விருதுநகரில் மகளிர் குழுக்களைக் கொண்டு மாஸ்க் தயாரிக்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் 10-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடி பணியாற்றக் கூடாது என்பதால் தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெண்கள் தவிர மற்றவர்கள் வீட்டிலிருந்தே மாஸ்க் தயாரித்துக் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, விருதுநகரில் சுமார் 80-க்கும் மேற்பட்ட பெண்கள் மாஸ்க் தயாரிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3 அடுக்கு கொண்ட இந்த மாஸ்க்குகள் ரூ.9-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது ஒரு நாளைக்கு சுமார் 8 ஆயிரம் மாஸ்க்குகள் வரை தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தேவை அதிகமாக இருந்தாலும் ஆள் பற்றாக்குறை, மூலப்பொருள் தட்டுப்பாடு காரணமாகவும் உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை என்கின்றனர் மாஸ்க் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மகளிர் குழுவினர்.