Published : 03 Apr 2020 11:54 AM
Last Updated : 03 Apr 2020 11:54 AM

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் ஆய்வு: பொதுமக்களுக்கு நிவாரணம், ரேஷன் பொருட்கள் வழங்கினார்: போலீஸாரைப் பாராட்டி முகக் கவசம் அளிப்பு

திமுக தலைவர் ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூருக்கு நேரில் சென்று பல இடங்களில் ஆய்வு நடத்தி நிவாரண உதவி, ரேஷன் பொருட்களை வழங்கினார். பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரைப் பாராட்டி முகக் கவசம் வழங்கினார்.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''இன்று (03-04-2020) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 'கரோனா ஊரடங்கினால்' பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார்.

6-வது மண்டல அலுவலகத்தில் 1000 தூய்மைப் பணியாளர்களுக்குக் கடந்த ஏழு நாட்களாக ஸ்டாலின் சார்பாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. அங்குச் சென்ற ஸ்டாலின் இன்றைய காலைச் சிற்றுண்டியை நேரடியாக வழங்கியதோடு, கரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார். அதோடு, அவர்களது குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் வழங்கினார்.

பின்னர், அருகில் இருக்கும் காய்கறி அங்காடியைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர், காய்கறிகளின் வரத்து மற்றும் விலையேற்றம் குறித்தும் விசாரித்தார். ஊரடங்கினால் அவதிக்குள்ளாகியிருக்கும் வெளிமாநில மக்களுக்கு, உணவு மற்றும் கரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியதோடு, அவர்களுக்குத் தேவையான ஆடைகள், போர்வைகள் மற்றும் அவர்களது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சோப்பு, பற்பசை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினார். அதோடு, மருத்துவர் குழுவினைக் கொண்டு அவர்களுக்கென 'மருத்துவ முகாம்' நடத்தப்பட்டது.

கரோனா தடுப்பு ஊரடங்கின் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 500 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 500 ரூபாய் உதவித்தொகை, அவர்களது குடும்பங்களுக்குத் தேவையான 5 கிலோ அரிசி உள்ளிட்ட 'ரேஷன் பொருட்கள்' ஆகியவற்றை கொளத்தூர் சட்டப்பேரவை அலுவலகத்தில் 'சமூக இடைவெளி' முறையைப் பின்பற்றி வழங்கினார்.

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு உதவி கோரியிருந்த, ஜி.கே.எம் காலனி 30-வது தெருவில் அமைந்துள்ள சிப் மெமோரியல் டிரஸ்ட்டைப் (SIP Memorial Trust) பார்வையிட்ட ஸ்டாலின் டிரஸ்ட் அமைப்பினர் கோரியிருந்த உதவித்தொகையை வழங்கியதோடு, அங்கு உள்ள எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 50 குழந்தைகளுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

பின்னர் அமுதம் பல்பொருள் சிறப்பு அங்காடியைப் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது, எவ்விதப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லாமல் கூட்டமாகக் குவிந்திருந்த மக்களிடம் 'சமூக இடைவெளியின்' அவசியத்தை எடுத்துரைத்து, அங்கு கூடியிருந்த அனைத்துப் பொதுமக்களுக்கும் முகக்கவசங்களை வழங்கினார். அதோடு, அந்த நியாய விலைக் கடையின் ஊழியருக்கும் முகக் கவசம், சானிடைசர் (கை கழுவும் திரவம்) ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர், பெரவள்ளூர் காவல் நிலையத்திற்குச் சென்ற ஸ்டாலின், முகக் கவசங்களைத் தொடர்ந்து மாற்ற வேண்டிய அவசியமிருப்பதால், அங்கிருந்த காவல்துறையினருக்கு அடிக்கடி மாற்றுவதற்குத் தேவையான முகக் கவசங்கள் மற்றும் வெளியிடங்களுக்குச் சென்று வரும் காவல்துறையினர் பயன்படுத்திக் கொள்வதற்கேற்ப சானிடைசர்களை வழங்கினார்.

ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில், அன்றாடத் தேவைகளுக்காக 'மளிகைக் கடைக்கு' வந்த பொதுமக்கள் கூட்டமாக இருப்பதைக் கண்டு, 'சமூக இடைவெளியின்' அவசியத்தை வலியுறுத்தி, அவர்கள் அனைவருக்கும் முகக் கவசங்களை வழங்கினார்.

அதோடு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு, அவர்களது சேவையைப் பாராட்டி நன்றி தெரிவித்த அவர், அவர்களுக்குத் தேவையான முகக் கவசங்கள் மற்றும் சானிடைசர்கள் ஆகியவற்றை வழங்கினார்''.

இவ்வாறு திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x