

கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் 500 ரூபாய்க்குள் மட்டுமே மதிப்புள்ள உபகரணங்களைக் கொண்டு சானிடைசர், தண்ணீரால் கை கழுவும் உபகரணத்தை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் தயார் செய்துள்ளார்.
அதன் மூலம் கிராம மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். மக்கள் கூடும் பொது இடங்களில் பயன்படுத்தும் வகையில் இந்த உபகரணம் அமைக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸை எதிர்கொள்ள ஒட்டுமொத்த மக்களும் போராடிக் கொண்டிருக்கும் தருணம் இது. இதன் தடுப்பு நடவடிக்கையாக கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருப்பது முதன்மையானதாக உள்ளது.
ரப்பர் தோட்டத்தில் பால்வெட்டும் தொழிலாளியான பாபு (45) வீட்டில் உள்ள பழைய உபகரணங்களைப் பயன்படுத்தி இந்த கை கழுவும் உபகணத்தை தயார் செய்துள்ளார்.
தற்போது காய்கறி சந்தை, மருத்துவமனை, காவல்நிலையம் போன்ற மக்கள் கூடும் இடங்களில் இதை பயன்படுத்துவதற்காக உள்ளாட்சி நிர்வாகத்தினர் பாபுவை அணுகி ஆலோசனை கேட்டு வருகின்றனர்.
இது குறித்து பாபு கூறுகையில்; ஏற்கெனவே தென்னை மரம் எளிதாக ஏறுவதற்கான கருவி, தண்ணீர் வீணாகாமல் பயன்படுத்தும் உபகரணம் போன்றவற்றை கண்டுபிடித்துள்ளேன்.
தற்போது கரோனா பாதிப்பில் இருந்து மீள கைகழுவுதல் முதன்மையானதாக உள்ளதால், கைகழுவும் குழாயைப் பலர் பயன்படுத்துவதால் தொற்று பரவுவதைத் தடுக்க காலால் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இரு பெடல்களை இணைத்து இந்த உபகரணத்தை தயாரித்துள்ளேன்.
ஒரு புறம் உள்ள பெடலை மிதித்தால் சேனிடைசர் வரும். அதை கையில் உபயோகப்படுத்திய பின்பு அடுத்த பெடலை இயக்கினால் தண்ணீர் வந்து கையை சுத்தப்படுத்தும் வகையில் வடிவமைத்துள்ளேன்.
நோய்த் தொற்று ஏற்படாதவாறு இது பாதுகாப்பாக அமைந்துள்ளது. கடையாலுமூடு கிராமத்தில் இதன் மூலம் நூற்றுகணக்கான மக்கள் கையை சுத்தம் செய்துள்ளனர்.
இதை தயார் செய்ய 500 ரூபாய் மட்டுமே செலவாகும். நான் வீட்டில் உள்ள பழைய பொருட்களைப் பயன்படுத்தி இதை தயார் செய்தேன் என்றார்.