

விழுப்புரம் மாவட்டத்தில் பல கிராமங்கள் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடித்து வருகின்றன.
கரோனா தொற்று சமூகத் தொற்றாக மாறுவதைத் தடுக்கும் விதமாக ஏப்ரல் 14-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசு அனைவரும் தனிமையில் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தினாலும், நேற்று முன்தினம் சென்னை, பாடி மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதே நிலை தமிழக நகரங்களில் தொடர்கிறது.
நகரங்களில் அரசின் உத்தரவை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் உள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி அருகே மூங்கில்பட்டு, பனையபுரம், விழுப்புரம் அருகே நல்லரசன் பேட்டை, பாணாம்பட்டு என சில கிராமங்கள் தனிமைப்படுத்திக்கொண்டன.
இக்கிராமங்களில் உள்ளவர்கள் கிராம எல்லையைக் கடந்து வெளியே வரக்கூடாது. வெளியாட்கள் யாராக இருந்தாலும் தகுந்த காரணம் சொல்லித்தான் உள்ளே வர வேண்டும் என்று அந்த கிராமங்கள் கட்டுப்பாடு விதித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து கிராம மக்களிடம் கேட்டபோது, "எங்கள் கிராமத்தில் நாள்தோறும் வீதிக்கு ஒருவர் மட்டும் கிராம மக்களுக்குத் தேவையானவற்றை அருகாமை நகரத்திற்குச் சென்று வாங்கி வந்து கொடுப்பார். இது நாள்தோறும் சுழற்சி முறையில் நடைபெறும்.
மேலும், கிராம எல்லைகளில் தடுப்பு அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அரசு வழங்கும் ரூ.1,000 நிவாரணம் பெறுவதற்கான டோக்கனை நாங்கள் மொத்தமாக வாங்கி கிராமத்தினருக்குக் கொடுத்துள்ளோம். அதேபோல, முழுமையான சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கிறோம்.
எங்களுக்கு பால், காய்கறி போன்றவை எங்களிடமே உள்ளது. மளிகை மற்றும் மருந்துகளுக்கு மட்டுமே வெளியே வருகிறோம்" என்றனர்.