வங்கிகள் கூடுதல் வட்டி வசூலிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

வங்கிக் கடனை வசூல் செய்ய மீண்டும் ஆரம்பிக்கும் போது, கூடுதல் வட்டி ஏதும் வசூலிக்காமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஏப்.3) வெளியிட்ட அறிக்கையில், "கரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பால் நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக கரோனா தடுப்புக்காக எடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் அன்றாட வேலைவாய்ப்பு முதல் அனைத்து விதமான தொழில்களும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் சிறு, குறு உள்ளிட்ட பல்வேறு தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு வருவாய் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.

இதனால் வங்கியில் கடன் வாங்கி தொழில் செய்தவர்கள் உள்ளிட்ட வங்கியில் கடன் வாங்கிய அனைவருமே கடனுக்கான வட்டியை செலுத்த இயலாது. இந்நிலையில், வங்கியில் கடன் வாங்கியவர்கள் தவணையை 3 மாதத்திற்கு பிறகு செலுத்தலாம் என்ற அறிவிப்பும் வெளியானது. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக இருக்க வேண்டும்.

ஆனால், இந்த 3 மாத தவணையை 3 மாதம் முடிந்த பிறகு வங்கிகள் வசூல் செய்யும் போது தவணை கட்டாமல் இருந்ததற்காக கூடுதலாக வட்டி ஏதும் வசூலிக்கக்கூடாது என்பது தான் கடன் வாங்கியவர்களின் எதிர்பார்ப்பாகும். இது தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு செய்யும் உதவியாக இருக்க முடியும்.

ஏனென்றால் வட்டி கட்டமுடியாமல் நிவாரண உதவி என்ற பெயரில் கால அவகாசம் கொடுத்துவிட்ட பிறகு மீண்டும் அந்த 3 மாத தவணைக் காலத்திற்காக கூடுதல் பணம் வசூலிக்க முயற்சித்தால் அது எப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கும் நிவாரண உதவியாக இருக்க முடியும்.

மேலும், அனைத்து வங்கிகளும் மாத தவணையை வசூலிக்க காலத்தை நீட்டுவதோடு, மீண்டும் தவணையை வசூல் செய்யும் போதும் கூடுதலாக கட்டணம் ஏதும் வசூல் செய்யக்கூடாது.

எனவே, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி அனைத்து வங்கிகளும் 3 மாத காலத்திற்கான தவணையை தள்ளிவைத்திருப்பதோடு, மீண்டும் தவணையை வசூல் செய்யும் போது பழைய தவணையை மட்டுமே வசூல் செய்யலாம்.

இதற்காக மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து 3 மாத வட்டி தவணைக்கு கூடுதல் வட்டியோ அல்லது வேறு வகையில் கூடுதல் கட்டணமோ வசூலிக்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பையும் வெளியிட வேண்டும்" என வாசன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in