

கரோனா வைரஸ் சிறப்பு பிரிவுள்ள புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் பணிக்கு வராத 54 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள ஆட்சியர், கரோனா தடுப்புப் பணிகளை சுமூக முறையில் மருத்துவமனையில் நிறைவேற்ற இந்த நடவடிக்கை தேவை என்று தெரிவித்துள்ளார்.
புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 700 படுக்கைகள், வெண்டிலேட்டர்களுடன் கரோனா சிகிச்சைக்காக தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கரோனா தொற்றுள்ள 4 பேர் தொடங்கி கண்காணிப்பில் உள்ள 28 பேரும் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் இவர்களை மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனையிலேயே தங்கி பணியாற்ற உத்தரவை பிறப்பித்தது.
இதற்கு ஒப்பந்த ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தங்கள் பணிக்கு பாதுகாப்பு இல்லாததுடன் ஊதியம் மிகவும் குறைவு, கரோனா தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்படவில்லை என்று கூறி கடந்த 2 தினங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும் மருத்துவமனை நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறவில்லை. இந்த நிலையில், நேற்று (ஏப்.2) 54 ஒப்பந்த ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. பணிக்கு வராத ஊழியர்கள் பட்டியல் மாவட்ட ஆட்சியருக்கு மருத்துவமனை நிர்வாகம் மூலம் அனுப்பப்பட்டது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அருண் ஒப்பந்த ஊழியர்கள் 54 பேரையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில், "கரோனா வைரஸை தடுக்க பேரிடர் மேலாண்மை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பல தடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதில் சுகாதாரத்துறை பணிகள் மிக முக்கியமானது.
இந்நிலையில், புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவமனையில் கரோனா தடுப்புப் பணிகளை இங்குள்ள பணியாளர்கள் புறக்கணிப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். அத்துடன் மருத்துவக் கல்லூரி முதல்வர் அளித்த புகாரில் 2-ம் தேதி 54 பேர் பணிக்கு வரவில்லை.
இதனால், கரோனா தடுப்பு சிகிச்சை பணிகளில் மருத்துவமனைகளில் பிரச்சினை உருவானது. பேரிடர் மேலாண்மை சட்டத்தில் பணி மற்றும் கவனக்குறைவாக செயல்படுவோர் மீதான நடவடிக்கை பற்றி தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு வராத 54 ஒப்பந்த தொழிலாளர்களும் உடனடியாக பணியிலிருந்து நீக்கப்படுகின்றனர். கரோனா தடுப்புப் பணிகளை சுமூக முறையில் மருத்துவமனையில் நிறைவேற்ற இந்த நடவடிக்கை தேவை.
அதேபோல் பணிக்கு வராதோரை நீக்கி அதுதொடர்பான விவரங்களை இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்" என்று ஆட்சியர் அருண் உத்தரவிட்டுள்ளார்.