

ஊரடங்கு காலத்திலும் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் நமது ஓசூர் முகவர் எம்.குமரன் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
"வரலாற்றிலேயே இப்பதான் நாங்க பெரிய நெருக்கடியில இருக்கோம்னு எல்லாம் பொய் சொல்ல மாட்டேன். ஏன்னா, இது ஓசூர். காவிரி பிரச்சினை, கர்நாடக பிரச்சினைன்னு வருஷத்துக்கு 4 தடவை இங்கே ஏதாவது நடக்கும். கடையடைப்புகூட நடக்கும். அதுலேயும் நாங்கஎங்க கடமையை ஒழுங்கா செஞ்சுகிட்டேதான் இருக்கோம். அப்படித்தான் இப்பவும்.
எல்லா வீடுகளுக்கும் சரியான நேரத்துல பேப்பர் போடுறதோட நிற்காம, பூட்டியிருக்கிற கடைவாசல்களிலும் பேப்பர் விற்கி றோம். இதுல ஆச்சரியம் என்னன்னா, புதுசு புதுசா வாசகர்கள் பேப்பர் வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. ‘நாளைக்கும் வருவீங்களா?'ன்னு ஆர்வமா கேட்கிறாங்க. ‘நாளைக்கும் இதே இடத்துல இருப்போம்'னு சொன்னா, அவங்களுக்கு அவ்வளவு சந்தோஷம். ‘ஓசூர் அலப்பநத்தத்தில் ஒரே தெருவில் 9 பேருக்கு கரோனா பாதிப்பு', ‘ஜூஜூவாடியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர் மரணம்' என்று வாட்ஸ்அப் வதந்திகளை வாசித்து வாசித்து, பீதியாகிப் போனவர்கள் இவர்கள். ‘இனிமேல் வீட்டில் வாட்ஸ்அப்போ, டிவி செய்தியோ பார்க்கவே மாட்டேன்... பேப்பர்தான் சரி' என்று நம்மிடம் வந்திருக்கிறார்கள்.
இன்னும் நிறையப் பேர் இதே மனநிலையில் இருக்கிறார்கள். ஊரடங்கு முடிந்த பிறகு வேண்டுமென்றால் பாருங்கள், நாளிதழ்களின் விற்பனை புதிய உச்சத்தை எட்டும். வார இதழ்கள்கேட்டும் வாசகர்கள் வரத்தான்செய்கிறார்கள். ஆனால், விற்பதற்குத்தான் புத்தகங்கள் இல்லை. 1989-ல், நான் இந்தத்தொழிலுக்கு வந்தேன். அப்போ தெல்லாம் சென்னையில் இருந்து காலை 8 மணிக்குத்தான் ‘தி இந்து' பேப்பர் ஓசூர் வரும்.
அப்படியிருந்தும் மக்கள் காத்திருந்து பத்திரிகை வாங்குவார்கள். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மக்களிடம் அதே ஆர்வத்தைப் பார்க்கிறபோது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று பூரிக்கிறார் குமரன்.