தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள உள்ளாட்சி நிதி, ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்க வேண்டும்: பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை

தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள உள்ளாட்சி நிதி, ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்க வேண்டும்: பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை
Updated on
1 min read

உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி, ஜிஎஸ்டி இழப்பீடு, தேசிய சுகாதார திட்ட மானியம் ஆகியவற்றை உடனடியாக தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அப்போது தமிழகத்தின் தேவைகள் குறித்து முதல்வர் பழனிசாமி விடுத்த கோரிக்கைகள்:

கரோனா வைரஸை கண்டுபிடிக்க உதவும் ‘பரிசோதனை கிட்கள்’ எண்ணிக்கையை தமிழகத்துக்கு அதிகரிக்க வேண்டும். பாதுகாப்பு கவசங்களுடன் கூடிய உபகரணங்கள், என்-95 முகக் கவசங்கள், வெண்டிலேட்டர்கள் போன்றவற்றை போதிய அளவில் வழங்க வேண்டும். இவற்றைவாங்கவும் இதர தேவைகளுக்காக வும் ரூ.3 கோடி வழங்க வேண்டும்.

ஏற்கெனவே கோரியிருந்தபடி ரூ.9 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும். மாநில மொத்த உற்பத்திமதிப்பில், நிதிப் பற்றாக்குறை 3 சதவீதம் என இருக்க வேண்டும் என்பது கடந்த 2019-20-ம் நிதி ஆண்டுக்கு தளர்த்தப்பட்டது போல், இந்த 2020-21-ம் நிதி ஆண்டுக்கும் ஒரு முறை நடவடிக் கையாக தளர்த்தப்பட வேண்டும்.

நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினங்களை மேற் கொள்ள, 2019-20-ம் நிதி ஆண்டில்அனுமதித்தது போல், கடன் வாங்கும் அளவை 33 சதவீதத்துக்கு மேல் உயர்த்திக் கொள்ள இந்த 2020-21-ம் நிதி ஆண்டுக்கும் அனுமதிக்க வேண்டும்.

இந்த 2020-21-ம் நிதி ஆண் டுக்கு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய மானியங்களை முன் கூட்டியே விடுவிக்க வேண்டும். நகர்ப்புற மற்றும் ஊரகஉள்ளாட்சிகளுக்கான நிதி ஆணையத்தின் பரிந்துரை மானியத்தில் 50 சதவீதத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும். வருவாய் பற்றாக்குறை மானியத்தில் 50 சதவீதத்தையும், கடந்த 2019-20-ம் ஆண்டு டிசம்பர்- ஜனவரி மாதத்துக்கான சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும்.

தேசிய சுகாதார திட்ட மானி யத்தையும் உடனடியாக வழங்க வேண்டும். மாநிலங்களுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள வழிவகை முன்பணத்தை 30 சதவீதத்தில் இருந்து 2 மடங்காக உயர்த்துவதுடன், 2020-21-ம்ஆண்டுக்கு வழங்கப்படும் முன்பணத்தை வட்டியில்லாமல் தர வேண்டும்.

இவ்வாறு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in