

கரோனா வைரஸ் தொற்றில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கரோனா வார்டைப் பயன்படுத்தும் நோயாளிகள், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான பிரத்யேக கவச உடைகள் திருப்பூரில் தயாரிக்கப்படுகின்றன.
பின்னலாடை நகரமான திருப்பூரில் கரோனா வைரஸ் பாதுகாப்பு முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது `கோவிட் -19 பாடி மாஸ்க் கோட்' என்ற பிரத்யேக கவச உடைகள் தயாரிக்கப்படுகின்றன. முதல்கட்டமாக 10,000 உடைகள் தயாரிக்க புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆர்டர் தந்துள்ளது.
இதுகுறித்து திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் எஸ்.எஸ்.லோகநாதன் கூறும்போது, "ஜிப்மர் மருத்துவமனை, பிரத்யேக உடை தயாரிக்கும் ஆர்டரை வழங்கியுள்ளது. கடந்த 3 நாட்களாக இந்த உடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். வழக்கமான ஆடை தயாரிப்பு போன்று இந்தப் பணி இருந்தாலும், இதில் பயன்படுத்தப்படுவது நான் ஓவன் மெட்டீரியலாகும்.
இது எளிதில் சூடாகிவிடும் தன்மை கொண்டது என்பதால், இதை வெட்டும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்த உடையைத் தயாரிக்கும் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரம் பேணப்படுகிறது. மிகவும் மெலிதாக இருப்பதால், பக்குவமாக கையாண்டு வருகிறோம்.
இப்பணியில் தினமும் 50 தொழிலாளர்கள் ஈடுபட்டு, 1,000 உடைகள் தயாரிக்கின்றனர். 10 நாட்களில் இந்த ஆர்டரை முடித்துவிடுவோம்" என்றார்.