

தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநர் ஆர்.மீனாகுமாரி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பொதுமக்கள் சாதாரணமாக தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு இஞ்சி, மிளகு, எலுமிச்சை, அதிமதுரம், மிளகு, மஞ்சள், ஆடாதொடை ஆகியவற்றை வைத்து, வீட்டிலேயே கை வைத்திய முறைப்படி, மருந்துகள் செய்து, நம் சுவாசப்பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.
மேலும், கால்துண்டு எலுமிச்சை, இஞ்சி, `கிரீன்’ டீ தூள், புதினா இலைகள், 2 சிட்டிகை மஞ்சள் தூள், நாட்டுச் சர்க்கரை கலந்து கொதிக்க வைத்து தினசரி 3 வேளை பருகலாம்.
தவிர, அதிமதுரம், மிளகு, பூண்டு, திப்பிலி ஆகியவற்றில் தலா ஒரு துண்டு சேர்த்து கசாயம் தயாரித்து, அதனுடன் நாட்டுச் சர்க்கரை கலந்தும் பருகலாம்.
அதேபோல், நெல்லிக்காய் பழச்சாறு பருகலாம். தூதுவளை, கண்டங்கத்திரி, துளசி, கற்பூரவல்லி ஆகியவற்றை கலந்து, பெரியோருக்கு 3, சிறியோருக்கு 2 தேக்கரண்டி அளவு கொடுக்கலாம். தற்போதுள்ள, சூழ்நிலைக்கேற்ப நம்மிடம் கையிருப்பில் உள்ள பொருட்களை வைத்து, கசாய மருந்துகள் தயாரிப்பதே நல்லது.
15 மூலிகைகள்
இதைத் தவிர்த்து, கபசுர குடிநீர் பொடி வாங்குவதற்காக பொது இடங்களில் கூடுவது, நோய் பரவலை அதிகரிக்கவே செய்யும். பொதுவாக, கபசுர குடிநீர் பொடியில், சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, லவங்கம், கடுக்காய் தோல், கற்பூரவல்லி, சீந்தில், சிறுதேக்கு, நிலவேம்பு, வட்டதிருப்பி, கோரைக்கிழங்கு என 15 வகையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான, மூலிகை மருந்துகள் உள்ளன.
அரசுக்கு பரிந்துரை
இதனால், நோய் அறிகுறி உள்ளவர்கள், நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிலவேம்பு, கபசுரம், விஷஜூரம், ஆடாதொடை மற்றும் மணப்பாகு குடிநீர் ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றை வழங்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கபசுர குடிநீர் பொடியானது ஒரு மருந்து பொருள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதை, நோய் பாதிப்புக்கேற்ப மருத்துவர் பரிந்துரைப்படியே உட்கொள்ள வேண்டும். மற்றபடி அரசு அறிவிக்கும் மருத்துவ வழிகளையே பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.