Last Updated : 03 Apr, 2020 07:19 AM

 

Published : 03 Apr 2020 07:19 AM
Last Updated : 03 Apr 2020 07:19 AM

முகக் கவசம் அவசியமா, அனாவசியமா?

N-95 முகக் கவசம்

உலகில் 300 கோடி மக்களை வீட்டிலேயே முடக்கி வைத்திருக் கிறது நாவல் கரோனா வைரஸ். அது தற்போது தனிமையின் அவசியத்தை மக்களுக்கு புரிய வைத்திருக்கிறதோ இல்லையோ, முகக் கவசம் அணிந்தால் போதும், கோவிட்-19 காய்ச்சல் வராது என்று ஒரு தவறான நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இதனால் உலக அளவில் முகக் கவசத்தின் தேவையும் அதிகரிக்க, அதற்கு இப்போது மிகுந்த தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. உண்மையில் முகக் கவசம் யாருக்கு தேவை? யாருக்கு தேவை இல்லை? அதை முறையாகப் பயன்படுத்துவது எப்படி? இதை ஒரு மருத்துவராக, உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி இங்கே பகிர்ந்துகொள்கிறேன்..

முகக் கவசத்தில் பல வகை உள்ளதாமே? அவை என்ன?

முகக் கவசத்தில் முக்கியமாக 3 வகைகள் உள்ளன. அவை:1.அறுவை சிகிச்சைப் பணி முகக்கவசம். 2. N-95 முகக் கவசம்.3. துணியாலான முகக் கவசம்.

அறுவை சிகிச்சைப் பணி முகக் கவசம் (Surgical mask) என்பது என்ன?

இது அறுவை சிகிச்சை செய்யும்போது, அறுவை சிகிச்சை மருத்துவர்கள், செவிலியர்கள், மயக்க மருத்துவர், அறுவைக்கூடப் பணியாளர்கள் ஆகியோர் அணிந்துகொள்ளும் 3 மடிப்புகள் கொண்ட முகக் கவசம் (Three layered mask). நோயாளியின் உடலில் இருந்து தெறிக்கும் எச்சில், ரத்தம், உடல் நீர்கள் போன்ற திரவத் துளிகளை மட்டுமே இது வடிகட்டும். ஃபுளூ, கரோனா போன்ற வைரஸ் கிருமிகளை இது வடிகட்டாது.

N-95 முகக் கவசம் என்பது என்ன?

N-95 முகக் கவசம் என்பதுகாற்றில் இருக்கும் 95% நுண் துகள்களை வடிகட்டக்கூடியது. 0.3 மைக்ரான் அளவுள்ள துகள்களையும் வடிகட்டும் என்பதால் ஃபுளூ, கரோனா போன்ற வைரஸ்களிடம் இருந்து பாதுகாப்பு தருவது. ஆகவே, கரோனா தடுப்புக்கு தற்போது இந்த வகை முகக் கவசங்களைத்தான் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.

N-95 முகக் கவசத்தில் ‘N’ என்பதற்கு என்ன அர்த்தம்?

‘Not oil resistant’ என்பதன் சுருக்கம்தான் ‘N’. இது எண்ணெய் பிசுக்கைத் தடுக்காது என்று அர்த்தம்.

‘ரெஸ்பிரேட்டர்’ (Respirator) என்கிறார்களே, அது என்ன?

சுவாச மிகு நுண் துகள்கள் வடிகட்டும் கருவிகள் ‘ரெஸ்பிரேட்டர்’ (Respirator) எனப்படுகின்றன. காற்றில் கலந்து வரும் நுண் துகள்களை 100% தடுக்கக்கூடிய N-100, 99% தடுக்கக்கூடிய N-99, 95% தடுக்கக்கூடிய N-95 ஆகிய மூன்றும் ‘ரெஸ்பிரேட்டர்’ வகை முகக் கவசங்கள்.

N-95 கவசம் எங்கு கிடைக்கும்?

மருத்துவக் கருவிகள் விற்கப்படும் நிறுவனங்களில் கிடைக்கும். ஆன்லைனிலும் கிடைக்கும். ஆனால், இந்த முகக் கவசத்துக்கு இப்போது உலக அளவில் கடும் தட்டுப்பாடு உள்ளது. மருத்துவப் பணியாளர்களுக்கே கிடைப்பது இல்லை என்ற புகார் உள்ளது. கரோனா வார்டுகளில் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் பணியாற்றினால் விலை மதிப்பில்லாத மருத்துவப்பணியாளரின் உயிரை இழக்க நேரி டும். இந்த இக்கட்டான சூழலில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதும் சுமையாகிவிடும். எனவே, மத்திய, மாநில அரசுகள் அக்கறை எடுத்து, உடனடியாக இவை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

துணியாலான முகக் கவசங்களை அணியலாமா?

வீட்டிலேயே தயாரிக்கப்படும் துணி முகக் கவசங்கள் மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தப்படும் முகக் கவசங்கள் அளவுக்கு தரமானதாக இருக்காது. இவை பெரும் தூசுகளை மட்டுமே வடிகட்டும். நுண் தூசுகளை வடிகட்டாது. அதிலும் கரோனாவிடம் இருந்து பாதுகாப்பு தராது. மாறாக, இதுபோன்ற பாதுகாப்பற்ற முகக் கவசங்கள் அணிந்துகொண்ட சுகாதாரப் பணியாளர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், அவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் அதிகம் ஏற்பட இவை வாய்ப்பு அளித்தன என்பதும் தெரியவந்துள்ளது. எனவே, இவற்றை பயன்படுத்துவது தவறு மட்டுமல்ல, காசையும் கரியாக்குவது.

முகக் கவசம் யார் அணிய வேண்டும்?

கரோனா பாதிப்பு உள்ளவர்கள், கரோனா பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படுபவர்கள், இவர்களை தனிமைப்படுத்தும்போது கவனித்துக் கொள்பவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவலர்கள், கடை ஊழியர்களுக்கு முகக் கவசம் அவசியம். அடுத்ததாக, இருமல், தும்மல் இருப்பவர்கள் அணியவேண்டும். மற்றவர்களுக்கு அவசியம் இல்லை.

மருத்துவப் பணியாளர்கள் N-95 முகக் கவசம் அணியலாம். மற்றவர்கள் அவசரத்துக்கு அறுவை சிகிச்சைப் பணிக்கான முகக் கவசத்தை அணியலாம். காரணம், N-95 முகக் கவசம் அணிய பயிற்சி இருக்க வேண்டும். இது முகத்தை இறுக்கிப் பிடிக்கும் என்பதால் வீட்டில் எந்நேரமும் இதை அணிந்து பணி செய்வது கடினம். என்னதான் முகக் கவசம் அணிந்தாலும், கைகளை அடிக்கடி சோப்பு தேய்த்துக் கழுவுவதும் முக்கியம்.

முகக் கவசம் அணியும்போது கவனிக்க வேண்டியது என்ன?

முகக் கவசம் அணியும் முன்புகைகளை குறைந்தது 20 விநாடிகளுக்கு நன்றாக சோப்பு அல்லது சானிடைசர் தேய்த்து கழுவ வேண்டும். முகக் கவசத்தின் வார்களை மட்டும் கைகளால் தொட்டுத் தூக்க வேண்டும். மூக்கு, வாய்,தாடை ஆகிய பகுதிகள் நன்றாகமூடும்படி காதுகளில் பொருத்திக்கொள்ள வேண்டும். முகத்துக்கும் முகக் கவசத்துக்கும் நடுவில் இடைவெளி இருக்கக் கூடாது.

முகக் கவசத்தின் முன்பக்கத்தில் கை படக் கூடாது. அப்படிபட்டுவிட்டால் உடனே கைகளைக் கழுவ வேண்டும். முகக் கவசம்அழுக்காகிவிட்டால் அதை கழற்றிவிட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நேரத்துக்கு மட்டுமே ஒரு முகக்கவசத்தைப் பயன்படுத்த வேண்டும். அதைக் கழற்றும்போது கைகளைப் பின்பக்கமாக கொண்டுசென்று அதன் வார்களைக் கழற்றி முன்பக்கமாக வெளியில் எடுக்க வேண்டும். அதை மறுபடி பயன்படுத்தக் கூடாது. மூடியுள்ள குப்பைத் தொட்டியில் அதைப் போட்டு மூடிவிட வேண்டும். இப்போது மீண்டும் ஒருமுறை கைகளை கழுவ வேண்டும். ஒருவர் பயன்படுத்திய முகக் கவசத்தை எக்காரணம் கொண்டும் மற்றவர் பயன்படுத்தக் கூடாது.

முகக் கவசம் அணிந்து நடைபயிற்சிக்கு செல்லலாமா?

நடைபயிற்சி, உடற்பயிற்சி,யோகா, தியானம் எதுவானாலும்வீட்டிலேயே செய்யுங்கள். அதிலும், முகக் கவசம் அணிந்துகொண்டு நடைபயிற்சிக்குச் செல்வது போலியான பாதுகாப்பையே கொடுக்கும். கரோனாவிடம் ஏமாந்து விடுவீர்கள். எச்சரிக்கை!

சாதாரண மக்களும் முகக் கவசங்களைப் பயன்படுத்துவதால் என்ன பிரச்சினை?

கரோனா எனும் மோசமான தொற்றுநோய் பரவிவரும் இந்த காலகட்டத்தில் சாதாரண மக்களும் முகக் கவசங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தால், உண்மையாகவே தேவைப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளுக்கு கிடைக்காமல் போகும். இதனால், மருத்துவப் பணியில் ஈடுபடுவோருக்கு முழு பாதுகாப்பு கிடைக்காமல் போகும். மக்களின் உயிரைக்காக்கப் போராடும் அவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட, மக்களே காரணமாகிவிடக் கூடாது. அதனால், தேவையானவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கவசத்தைவிட சமூக விலகலே முக்கியம்

வெளியே செல்லும்போது ஒரு பாதுகாப்புக்கு முகக் கவசம் அணியலாமா?

நீங்கள் ஆரோக்கியமானவராக இருந்தால் முகக் கவசம் அணியவே தேவையில்லை. ஏற்கெனவே சொன்னதுபோல, N-95 முகக் கவசம்தான் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும். மற்ற ரகங்கள் பயன்படுத்துவது வீண். அவை பாதுகாப்பு தராது. பதிலாக, கரோனா வைரஸ் கிருமிகளை வீட்டுக்கு கொண்டுவந்துவிடும். எப்படியென்றால், முகக் கவசம் அணிந்திருக்கும் தைரியத்தில் நீங்கள் அடிக்கடி வெளியே சென்றுவருவீர்கள். ஒருவேளை, செல்லும் இடங்களில் கரோனா இருந்தால் அவை நீங்கள் அணிந்திருக்கும் முகக் கவசத்தில் ஒட்டிக்கொண்டு உங்களுடன் வீட்டுக்கே வந்துவிடும். உங்கள் மூக்கு வழியாக நுரையீரலுக்கு உள்ளேயும் செல்லக்கூடும். அதனால், ஆபத்தை விலைக்கு வாங்காதீர்கள். வெளியே சென்றால் மற்றவர்களிடம் இருந்து ஒரு மீட்டர் தூரம் தள்ளி இருப்பது மட்டுமே கரோனாவில் இருந்து உங்களை காப்பாற்றும். முகக் கவசத்தைவிட அதுதான் மிக முக்கியம்.

கட்டுரையாளர்: பொதுநலமருத்துவர்

தொடர்புக்கு:gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x