

கரோனா வைரஸ் சவாலை எதிர்கொள்ள அனைத்து மாநில அரசுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 4 அம்ச திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று மாநில முதல்வர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், இந்தியா விலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 25-ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மாநில முதல் வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்தந்த மாநிலங் களின் தலைநகரில் இருந்து முதல்வர்கள் காணொலி காட்சி மூலம் கூட்டத்தில் கலந்து கொண் டனர். அப்போது பிரதமர் நரேந் திர மோடி கூறியதாவது:
கரோனா வைரஸை கட்டுப் படுத்த அடுத்த சில வாரங்கள் மாநில அரசுகள் மிக கவனமுடன் செயல்பட வேண்டும். குறிப் பாக அனைத்து மாநிலங்களும் 4 அம்ச திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். கரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர் களுக்கு உடனடியாக பரி சோதனை நடத்த வேண்டும். அவர்களோடு தொடர்புடையவர் களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களை தனிமைப் படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். சந்தேகத்துக்கு உரிய நபர்களை தனிமைப்படுத்த வேண்டும். இந்த 4 அம்சங்களையும் மாநில அரசுகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
தனி மருத்துவமனைகள்
தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல் செய்யப் பட்டுள்ளது. இந்த ஊரடங்கை மாநில அரசுகள் கண்டிப்புடன் அமல் படுத்த வேண்டும். ஊரடங்கு முடிந்த பிறகு வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனைகளை அமைக்க வேண்டும்.
ஆயுஷ் மருத்துவர்கள்
கரோனா வைரஸ் பிரச்சினை எவ் வளவு நாள் நீடிக்கும். நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை கணிக்க முடியவில்லை. எனவே எந்த சவாலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.
கரோனா வைரஸ் நமது அன்றாட வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். மாநிலம், மாவட் டம், நகரங்கள், வட்ட அளவில் அந்தந்த பகுதி சமுதாய தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள் கரோனா வைரஸுக்கு எதிரான போரில் மக்களை ஒன்றிணைக்க வேண்டும்.
மருத்துவர்கள் பற்றாக் குறையை சமாளிக்க ஆயுஷ் மருத் துவர்களையும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். சுகாதார துணைநிலை ஊழியர்கள், என்சிசி, என்எஸ்எஸ் மாணவ, மாணவியருக்கு ஆன் லைன் வாயிலாக சிறப்பு பயிற்சிகளை வழங்க வேண்டும்.
அனைத்து மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு கரோனா வைரஸை கட்டுப்படுத்த வேண்டும். மாவட்ட அளவில் அவசர கால குழுக்களை நியமிக்க வேண்டும். மாவட்ட அளவில் கண்காணிப்பு அலுவலர்களையும் நியமிக்க வேண்டும்.
மத்திய அரசு வழங்கும் நிவாரண உதவிகளை பெற வங்கிகளில் மக்கள் பெருந்திரளாக கூடுவதை தவிர்க்க வேண்டும். வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்வது தொடர்பான இதர வழிமுறைகளை மாநில அரசுகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆன் லைன் வசதிகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும்.
ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வரும் மாநில அரசுகளுக்கு பாராட்டுகளை உரித்தாக்குகிறேன். சட்டம், ஒழுங்கை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்று வீடியோ தகவலை பகிர்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ட்விட்டரில், “நாளை (இன்று) காலை 9 மணிக்கு ஒரு சிறு வீடியோ காட்சி தகவலை நாட்டு மக்களுக்கு பகிரப்போகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இந்தத் தகவல் கரோனா வைரஸ் தொடர்புடையதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீறீனால் 2 ஆண்டு சிறை
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள் ளது. ஆனால் ஆபத்தை உணரா மல் பலர் வெளியில் சுற்றித் திரி கின்றனர்.
காய்ச்சல் அறிகுறி உள்ள வர்களை தேடி செல்லும் சுகாதாரத் துறை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்களும் நடை பெற்று வருகின்றன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
அனைத்து மாநில அரசுகளும் யூனியன் பிரதேச அரசுகளும் ஊரடங்கை கண்டிப்புடன் அமல் படுத்த வேண்டும். ஊரடங்கை மீறுவோர் மீது இந்திய தண்டனை சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சட்டத்தின் படி ஊரடங்கை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் விதிக்க முடியும். மேலும் வதந்திகளை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு ஓராண்டு சிறையும் அபராதமும் விதிக்க முடியும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.