

கரோனாவை ஒழிக்க அனைத்துத் தரப்பினரும் தங்களால் ஆன ஒத்துழைப்பை நல்கி வருகிறார்கள். அதிலும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களை இதற்காக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அப்படி அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு சேவை அமைப்புகள் மற்றும் நல்லோர் பலரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகிறார்கள். அந்த வகையில் கடலூர், திருப்பாதிரிப்புலியூரில் டூ வீலர் மெக்கானிக் ஷாப் வைத்துள்ள ரமேஷ் அவரால் இயன்ற உதவியைச் செய்ய முன் வந்துள்ளார்.
கடலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து கரோனா பணிக்காக மக்கள் சேவையாற்றி வரும் மருத்துவர்கள், காவலர்கள், மற்றும் செவிலியர்களின் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பஞ்சராகும் பட்சத்தில் அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து இலவசமாக பஞ்சர் ஒட்டித் தரப்படும் என்று அறிவித்துள்ளார் ரமேஷ்.
இவரது அறிவிப்பு வெளியானதில் இருந்து அழைப்புகள் வர ஆரம்பித்து விட்டன. “எவ்வளவு தூரமாக இருந்தாலும் பரவாயில்லை. நான் போய் சரி செய்து தருகிறேன். இதற்குக் கட்டணம் எதுவும் வசூலிக்கப் போவதில்லை. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. நிறைய அழைப்புகள் வந்தால் நாங்களும் வருகிறோம் என்று என் நண்பர்களும், என் சீடர்களும் சொல்லியிருக்கிறார்கள். அதனால் கவலைப்படாமல் என்னை அழையுங்கள். நீங்கள் செய்யும் சேவைக்கு என்னால் முடிந்த கைம்மாறு இது" என்கிறார் ரமேஷ்.
ரமேஷின் மகன் வெளிநாட்டிலும், மகள் புனேவிலும் பணிபுரிகிறார்கள். "25 ஆண்டுகளாக மெக்கானிக் தொழில் செய்து வருகிறேன். மக்கள் என்னை வாழ வைத்தார்கள். இப்போது மக்களை ஆரோக்கியமாக வாழ வைக்க அனைவரும் பாடுபடுகிறர்கள். அவர்களுக்கு அணில் போல நாம் ஏதாவது உதவ வேண்டும். அதுக்காகத்தான் இந்த அறிவிப்பு" என்கிறார் ரமேஷ்.
உதவிக்கு அவரை 98940 36760 என்ற அலைபேசி எண்ணில் அழைக்கலாம்.