

தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை, ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் எப்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் நல ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
“தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை நிவாரணமாக, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கும், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற ஓட்டுநர்களுக்கும் தலா ரூபாய் 1000 மற்றும் 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் வழங்கிட உத்தரவிடப்பட்டது.
தற்போது தடை உத்தரவு காரணமாக தமிழ்நாட்டில் சிக்கித் தவிக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் குடும்பம் ஒன்றுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் வழங்கிடவும், சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வரால் மார்ச் 24 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அவ்வறிவிப்புகளைத் தொடர்ந்து பதிவு பெற்ற 12,13,882 கட்டுமானத் தொழிலாளர்களுக்கும், பதிவு பெற்ற 83,500 அமைப்புசாரா ஓட்டுநர்களுக்கும் தலா ரூ.1000 வழங்கிட அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேற்படி தொழிலாளர்களுக்கு ரூ.1000 வீதம் வழங்க ஏதுவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) அவர்களுக்கு உரிய தொகை மாவட்டந்தோறும் அனுப்பி வைக்கப்பட்டு அத்தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் உடனே பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், பிற மாநில கட்டுமானத் தொழிலாளர்கள், வாரியத்தில் பதிவு பெற்ற அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், உள்ளிட்ட 14,57,000 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பம் பயன்பெறும் வகையில் ஒவ்வொருவருக்கும் 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் அடங்கிய பை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேற்படி தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய உணவுப் பொருட்கள் அடங்கிய பை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிவில் சப்ளைஸ் குடோன்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.
மேற்படி உணவுப்பொருட்கள் அடங்கிய பை வழங்கப்படும் முறை மற்றும் நாள், இடம், நேரம் ஆகியவை குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி சம்பந்தப்பட்ட மாவட்டத் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மூலம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது”.
இவ்வாறு தொழிலாளர் நல ஆணையம் தெரிவித்துள்ளது.