Published : 02 Apr 2020 07:08 PM
Last Updated : 02 Apr 2020 07:08 PM

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு தொற்று கரோனா உறுதி; பாதிப்பு எண்ணிக்கை 309 ஆனது: பீலா ராஜேஷ்

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 75 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“86,312 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். ஒரே நாளில் வீட்டுக் கண்காணிப்பில் இருப்போரில் 9000 பேர் அதிகரித்துள்ளனர். டெல்லியிலிருந்து திரும்பிய 1103 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் ரத்த மாதிரி எடுத்தாகிவிட்டது. முடிவுகள் வர வர நான் தகவல் சொல்கிறேன்.

தமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது.

கரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள். ஒருவர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர். இதன் மூலம் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 264 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 19 மாவட்டங்களில் வசிப்பது தெரியவந்தது. தற்போது கூடுதலாக திருவள்ளூர் மாவட்டமும் இணைந்துள்ளது. தற்போது நம்மிடம் 12,000 பரிசோதனை உபகரணங்கள் உள்ளன.

இதுவரை 17 பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. கூடுதலாக 7 கரோனா பரிசோதனை மையங்கள் இந்த வாரம் இணைக்கப்படுகின்றன. முதல்வரின் எண்ணம் அனைத்து மருத்துவமனைகளிலும் பரிசோதனை மையங்கள் வரவேண்டும் என்பதே. போதுமான அளவுக்கு மாஸ்க் , உடைகள் உள்ளன. எங்காவது செவிலியர்களுக்கு, மருத்துவர்களுக்கு இல்லை என்று சொன்னால் நடவடிக்கை எடுக்கிறோம். எங்கேயும் தட்டுப்பாடு இல்லை.

இது புது வகை நோய் என்பதால் ஒரு அனுமானத்தின் அடிப்படையில் மற்ற நாடுகளில் எப்படி இது கட்டுப்படுத்தப்பட்டது என்பதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறோம்”.

இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x