

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் புதுடெல்லி சென்று திரும்பிய ஒருவருக்கு கரோனா இருப்பது உறுதியானநிலையில், அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களது கிராமச் சாலையை தடுப்பு வைத்து மூடினர்.
புதுடெல்லியில் ஒரு அமைப்பின் சார்பில் மாநாடு நடந்தது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
அவர்களில் 26 பேரை முதற்கட்டமாக மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதில் திருப்பத்தூரைச் சேர்ந்த 3 பேர், தேவகோட்டை , இளையான்குடியைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தேவகோட்டையில் கரோனா தொற்று உள்ளவர் வசித்த பகுதிகள் முழுவதையும் யாரும் நடமாட முடியாதபடி போலீஸார் சீல் வைத்தனர்.
இதையறிந்த தேவகோட்டை அருகேயுள்ள பனிப்புலன்வயல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தேவகோட்டையில் இருந்து யாரும் தங்கள் கிராமத்திற்கு வர முடியாதபடி சாலையில் தடுப்பு அமைத்தனர்.
மேலும் அக்கிராம மக்கள் வெளியேறாமல் இருக்க, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இளைஞர்களே வாங்கி கொடுத்து வருகின்றனர்.