

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கரோனாவில் பாதிக்கப்பட்ட 5 பேரும் வசித்த பகுதிகளான நாகர்கோவில் டென்னிசன்ரோடு, வௌளடிச்சிவிளை, தேங்காய்பட்டணம், மணிகட்டிபொட்டல் பகுதிகள் சீல் வைக்கப்பட்டு அங்கிருந்து வெளியே மக்கள் வருவதற்கும், வெளிநபர்கள் உள்ளே செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையினர், போலீஸார், மற்றும் உள்ளாட்சி துறையினர் ஏற்கனவே கரோனா பாதித்தோரின் உறவினர்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கரோனா பாதித்தோரின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மணிகட்டிபொட்டலில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் வீடு அமைந்துள்ள பூச்சிவிளாகம், மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இன்று நாகர்கோவில மாநகராட்சி நகர்நல அலுவலர் கிங்சால் முன்னிலையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதைப்போல் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதைப்போலவே வெள்ளடிச்சிவிளை, தேங்காய்பட்டணம், நாகர்கோவில் டென்னிசன்ரோடு பகுதியிலும் நோய் தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.