

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் புதுடெல்லி சென்று திரும்பிய 3 பேருக்கு கரோனா இருப்பது உறுதியான நிலையில், 3 தினங்களுக்கு காய்கறி, பலசரக்கு கடைகள் உட்பட அனைத்தையும் மூட திருப்பத்தூர் டிஎஸ்பி, வட்டாட்சியர் உத்தரவிட்டனர்.
இதற்கு மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தடை விதித்தார்.
புதுடெல்லியில் ஒரு அமைப்பின் சார்பில் மாநாடு நடந்தது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
அவர்களில் 26 பேரை முதற்கட்டமாக மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதில் திருப்பத்தூரைச் சேர்ந்த 3 பேர், தேவகோட்டை , இளையான்குடியைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவர்களுக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து திருப்பத்தூரில் கரோனா தொற்று உள்ளவர்கள் வசித்த அச்சுக்கட்டு, புதுத்தெரு ஆகிய பகுதிகளை யாரும் நடமாட முடியாதபடி போலீஸார் சீல் வைத்தனர்.
மேலும் அச்சுக்கட்டைச் சேர்ந்தவர் மருந்தகம், பல்பொருள் அங்காடி நடத்தி வந்துள்ளார். இதையடுத்து அவற்றிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் மருந்தகம் அருகே செயல்பட்ட கிளீனிக்கிற்கும் சீல் வைக்கப்பட்டது.
மேலும் திருப்பத்தூர் பேரூராட்சியில் இரண்டு முக்கிய இடங்களில் கரோனா தெற்று இருப்பது கண்டறியப்பட்டதால், ஏப்.3 -ம் தேதி (இன்று) முதல் 3 நாட்களுக்கு மருத்துவமனை, மருந்தகம், பால் கடையை தவிர காய்கறி, பலசரக்கு கடைகள், உணவகங்களை மூட டிஎஸ்பி அண்ணாத்துரை, வட்டாட்சியர் ஜெயலட்சுமி, பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து கரோனா தொற்று இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி பரிசோதிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதிகளில் கிருமினி நாசினி தெளிக்கும் பணிகளில் உள்ளாட்சி அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் அதிகாரிகளின் உத்தரவை ரத்து செய்து காய்கறி, மளிகை கடை, உணவகங்களை திறக்க மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.
ஆட்சியர் உத்தரவால் அதிருப்தி:
மற்ற மாவட்டங்களில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகள் முழுவதும் சீல் வைக்கப்பட்டு, அனைத்து கடைகளும் அடைக்கப்படுகின்றன. அதன்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும், அதற்கு மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்தது திருப்பத்தூர் மக்கள், அதிகாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.