Last Updated : 02 Apr, 2020 05:07 PM

 

Published : 02 Apr 2020 05:07 PM
Last Updated : 02 Apr 2020 05:07 PM

பல மாதங்கள் ஊதிய நிலுவை; உணவில்லாமல் தவிக்கும் புதுச்சேரி அரசு சார்பு ஊழியர்கள்

முதல்வர் நாராயணசாமி: கோப்புப்படம்

புதுச்சேரி

புதுச்சேரியில் பல அரசு சார்பு நிறுவனங்களில் பல மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை. இதனால், இவர்களின் குடும்பத்திலுள்ள உறுப்பினருக்கு தலா ரூ.100 வீதம் தர கோரிக்கை வலுத்துள்ளது.

புதுச்சேரியில் ஏராளமான அரசு சார்பு நிறுவனங்கள் முழுமையாக செயல்பாட்டில் இல்லை. குறிப்பாக பாப்ஸ்கோ, நியாயவிலைக் கடை, கல்வித்துறையில் பால்/ துப்புரவு பணி/ மதிய உணவு பிரிவு, கதர் வாரியம், மகளிர் ஆணையம், கூட்டுறவு கல்வியல் கல்லூரி, போக்குவரத்துக் கழகம், பொதுப்பணித்துறை தினக்கூலி, பாசிக், காரைக்கால் கூட்டுறவு நூற்பாலை, பாரதி மற்றும் சுதேசி நூற்பு ஆலை, விற்பனை குழு, பாண்டெக்ஸ், கான்பெட், புதுச்சேரி கூட்டுறவு நூற்பாலை, கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஐந்து மாதங்கள் முதல் நூற்றைந்து மாதங்கள் வரை மாதச் சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது.

இதனால் அதில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் குடும்பத்தில் உள்ளோர் பலரும் தனியாரிடம் கூலி வேலைக்கும், சாலையோர டிபன் கடை உள்ளிட்ட பல பணிகளில் ஈடுபட்டு கிடைக்கும் வருவாயில் உணவு சாப்பிட்டு வந்தனர். தற்போது கரோனாவால் ஊரடங்கு நிகழ்ந்துள்ளதால் உணவுக்கே வழியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுவை மாநில அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச் செயலாளர் லட்சுமணசாமி கூறுகையில், "கரோனா வைரஸ் பேரிடரால், புதுச்சேரி அரசின் ஊரடங்கு, சமூக விலகல் நடவடிக்கையால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் முடங்கியுள்ளன

இதன் விளைவு 2 வேலை சாப்பாடும் சாப்பிட முடியாமல் சம்பளம் கிடைக்காத தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் பட்டினியால் வதங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். குடும்பத்தில் உள்ளவரின் உடம்பில் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது.

பேரிடரைத் தவிர்க்க மத்திய அரசு நகர மற்றும் வீட்டு வசதி அமைச்சக செயலர் வீடற்ற மக்களுக்கு உணவு கிடைத்திட, நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.100 வீதம் வழங்க துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும் என புதுச்சேரி அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதேபோல், மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி அரசுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதி மூலம் கரோனா வைரஸ் பரவுவதற்கான சூழலைத் தடுத்திட பேரிடர் நிதியை பயன்படுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் அனுப்பியுள்ளது.

எனவே, வாழ வழியின்றித் தவிக்கும் சம்பளம் கிடைக்காத நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு ரூ.100 என்கிற அடிப்படையில் ஒரு குடும்பத்தில் நான்கு நபருக்கு மார்ச் மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை ஒவ்வொரு மாதமும் ரூ.12 ஆயிரம் வழங்கிட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x