

கரோனா ஊரடங்கால் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளதால் உழவர் சந்தைகளில் காய்கறிகள் வாங்க மக்கள் ஆர்வம்க காட்டுகின்றனர். அதனால், அதன் விற்பனை நேரம் கூடுதலாக 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1999-ம் ஆண்டு திமுக ஆட்சியில், அப்போதைய முதலமைச்சர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள், பழங்களை அவர்களே இடைத் தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்வதற்காக உழவர்சந்தை திட்டத்தை தொடங்கினார். தற்போது தமிழகத்தில் 170 உழவர் சந்தைகள் செயல்படுகிறது.
இந்த உழவர்சந்தைகள் சாதாரண நாட்களில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படும். உள்ளூர் சில்லறை காய்கறி கடை விற்பனை விலையில் இருந்து 20 சதவீதம் குறைவாகவும், விவசாயிகளே நேரடியாக ப்ரஷான காய்கறிகளை விற்பதால் மக்கள் உழவர்சந்தைகளில் காய்கறிகள் வாங்க ஆர்வம் காட்டுவார்கள்.
இந்நிலையில் ‘கரோனா’ ஊரடங்கு உத்தரவால் உழவர்சந்தைகள் விற்பனை நேரம், காலை 6 முதல் 9 மணி வரையாக குறைக்கப்பட்டது. அதனால், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் குவிந்ததால் மதுரை, ஓசூர், கோவை, திருப்பூர் போன்ற காய்கறிகள் விற்பனையில் முன்னிலை வகிக்கும் உழவர்சந்தைகளில் போலீஸார் பாதுகாப்புடன் சமூக இடைவெளி வரிசை பின்பற்றப்பட்டது.
மதுரை சொக்கிகுளம் உழவர்சந்தையில் ஆளில்லாத குட்டி விமானம் மூலம், சமூக இடைவெளியை போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.
தற்போது ‘கரோனா’ ஊரடங்கால் உள்ளூர் சில்லறை காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ ரூ.40 முதல் ரூ.50 முதல் 60 வரையும், மற்ற காய்கறிகள் விலை ரூ.40 முதல் ரூ.60, ரூ.80 வரையும் விற்கிறார்கள்.
அதனால், தற்போது மக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ள உழவர்சந்தைகளிலே காய்கறிகள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். அதனால், காய்கறி வரத்தும், அதன் விற்பனையும் முன்பை விடக் கூடியுள்ளது.
மதுரை சொக்கிகுளம் உழவர்சந்தை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் கூறுகையில், ‘‘மக்கள் கூட்டம் அதிகமாக வருவதால் தற்போது உழவர்சந்தை விற்பனை நேரம், இந்த ஊரடங்கு நேரத்திலும் மதியம் 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உழவர்சந்தையில் காய்கறிகள் விலை விவசாயிகள் கூட்டி விற்க முடியாது. நிர்ணயிக்கப்பட்ட விலையிலே விற்பதால் மக்கள் காய்கறி வாங்க முன்பை விட அதிகளவு வர ஆரம்பித்துள்ளனர்.
சின்ன வெங்காயம் மட்டுமே உழவர்சந்தையில் ரூ.80 முதல் ரூ.90 வரை விற்கிறது. மற்ற காய்கறிகள் அனைத்தும் ரூ.20 முதல் ரூ.25 வரைதான் விற்கிறது. கத்தரிக்காய், வெண்டை பற்றாக்குறையால் ரூ.30 முதல் ரூ.35 வரை விற்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.