

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு நாடெங்கும் பொதுமக்கள் நிதி அளிக்க பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி இருக்கும்போது தனி அறக்கட்டளை மூலம் ஏன் பிரதமர் நிதி திரட்ட வேண்டும் என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று விடுத்துள்ள அறிக்கை:
“கரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டுவதற்காக பிரதமர் பெயரில் ஒரு அறக்கட்டளையை மோடி உருவாக்கியிருக்கிறார். ஆனால் 1948-ம் ஆண்டு முதல் பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த நிதியில் டிசம்பர் 2019 நிலவரப்படி ரூபாய் 3,800 கோடி செலவழிக்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.
கடந்த 2018 -19 ஆம் ஆண்டில் கூட ரூபாய் 212 கோடிதான் செலவிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையை இயற்கை பேரழிவுகளான வெள்ளம், புயல், பூகம்பம் மற்றும் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிவாரணத் தொகையை பிரதமர் வழங்குவது வழக்கமாகும். இந்த நிதிக்கு வழங்கப்படுகிற நன்கொடைக்கு 100 சதவீத வரிச்சலுகை உண்டு.
கடந்த 72 ஆண்டுகளாக நடைமுறையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியில் நிலுவையில் இருக்கிற ரூபாய் 3,800 கோடியைப் பயன்படுத்தாமல் புதிதாக தமது பெயரில் புதிய நிதியத்தை உருவாக்குவது ஏன்? சமீபகாலமாக மத்திய அரசில் ஏற்பட்டுள்ள அதிகாரக் குவியலின் காரணமாக எல்லாவற்றுக்கும் பிரதமரை முன்னிலைப்படுத்துவது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வழிவகுக்குமா?
136 கோடி மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாட்டில் ஒரு தனி நபரை முன்னிலைப்படுத்தி திட்டங்களை அறிவிப்பது ஏற்புடையதுதானா? கரோனா போன்ற கொடிய நோயை எதிர்க்க தனிப்பட்ட முறையில் பிரதமரை முன்னிலைப்படுத்தாமல் ஏற்கெனவே மிகச்சிறப்பாக நடைமுறையில் இருக்கிற பிரதம மந்திரி நிவாரண நிதியைப் புறக்கணித்து புதிய நிதியத்தை உருவாக்கியதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்”.
இவ்வாறு கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.