செவிலியர்கள் போராட்டம்.
செவிலியர்கள் போராட்டம்.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழு கவச உடை வழங்கவில்லை எனப் புகார்; செவிலியர்கள் போராட்டம்

Published on

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தனி வார்டில் பணிபுரியும் செவிலியர்களுக்கு முழு கவச உடை வழங்கக் கோரி செவிலியர்கள் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டவர்கள், அவர்களுடன் நெருக்கத்தில் இருந்தவர்கள், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், ஆயங்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் சந்தேகத்துக்குரிய அந்த 23 பேர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனி வார்டில் வைத்துக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தனி வார்டில் பணிபுரியும் செவிலியர் மற்றும் ஊழியர்களுக்கு முழு கவச உடை உள்ளிட்ட எந்தப் பாதுகாப்புக் கவசங்களும் வழங்கப்படவில்லை. அவசர சிகிச்சைப் பிரிவிலும் கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று ஆரம்பக்கட்ட பரிசோதனை செய்யப்படுகிறது. அங்கு பணிபுரியும் செவிலியர்களுக்குப் பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்படவில்லை எனவும் முகக் கவசம் மற்றும் கையுறை மட்டும் அணிந்துகொண்டு பணியாற்ற வற்புறுத்தப்படுவதாகவும் கூறி இன்று (ஏப்.2) காலை 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் பணியைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பணிக்குச் சென்றனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், "அவரச சிசிக்சைப் பிரிவு, தனி வார்டில் பணியில் இருக்கும் செவிலியர்கள், ஊழியர்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு முழு கவச உடைகளும் வழங்கப்படும்" என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in