

மளிகை பொருட்கள்களைப் பொறுத்தவரை இதுவரை எந்த வித தட்டுப்பாடும் இல்லை. செயற்கையாக தட்டுப்பாடு உருவாக்கினால் அரசு வேடிக்கை பார்க்காது என்று கயத்தாறில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் 3 பேரும் டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள். அவர்கள் வசிக்கும் பகுதி தனிமைப் படுத்தப்பட்டு மாவட்ட நிர்வாகம் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள் அனைத்தும் பல கடல் மைல்களுக்கு அப்பால் நிறுத்தப்பட்டுள்ளது. இது போன்று அனைத்து நிலைகளிலும் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்படத்துறையை பொறுத்தவரை திரைப்பட வர்த்தக சபை, பெப்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்னை தொடர்பு கொண்டு, தாங்கள் இணைந்து முதல்வரின் கரோனா நிவாரணத்துக்கு நிதி திரட்டி தருவதாகக் கூறியுள்ளனர்.
அவர்கள் அந்தப் பணியை செய்து வருகின்றனர். கலை உலகைச் சேர்ந்தவர்கள் எப்போதும் யார் பாதித்தாலும் முதல் ஆளாக வந்து உதவி செய்யக்கூடிய நிலையில் உள்ளவர்கள் தான்.
சமூக இடைவெளிக்காக வீடுகளுக்கு சென்று பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மளிகை பொருட்கள்களைப் பொறுத்தவரை இதுவரை எந்த வித தட்டுப்பாடும் இல்லை. செயற்கையாக தட்டுப்பாடு உருவாக்கினால் அரசு வேடிக்கை பார்க்காது.
தமிழகத்தில் வெளிப்படையாக அனைத்து காய்கறி மற்றும் மளிகை கடைகளும் மதியம் 2.30 மணி வரை திறந்து வைத்திருக்க வேண்டும். காய்கறி கடைகளில் மக்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்க தான் ஆங்காங்கே உள்ள பேருந்து நிலையம் உள்ளிட்ட இரண்டு மூன்று பகுதிகளில் சந்தை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறைக்கு ஊக்கத்தொகை அளிப்பது தொடர்பாக தமிழக முதல்வர் முடிவெடுப்பார்.
கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இங்குள்ள சித்த மருத்துவ பிரிவு கட்டடம் எனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டது.
அதேபோல் கபசுர குடிநீர் விநியோகம் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை துணை சுகாதார நிலையங்கள் மூலமாகவும் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார் அவர்.