புதுடெல்லி மாநாட்டுக்குச் சென்று சிவகங்கை திரும்பிய 5 பேருக்கு  கரோனா: திருப்பத்தூரில் 3 நாட்களுக்கு காய்கறி , பலசரக்கு கடைகளை மூட உத்தரவு

புதுடெல்லி மாநாட்டுக்குச் சென்று சிவகங்கை திரும்பிய 5 பேருக்கு  கரோனா: திருப்பத்தூரில் 3 நாட்களுக்கு காய்கறி , பலசரக்கு கடைகளை மூட உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி சென்று திரும்பிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்தநிலையில்
திருப்பத்தூரில் 3 நாட்களுக்கு காய்கறி, பலசரக்கு கடைகளை மூட திருப்பத்தூர் டிஎஸ்பி, வட்டாட்சியர் உத்தரவிட்டனர்.

புதுடெல்லியில் ஒரு அமைப்பின் சார்பில் மாநாடு நடந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 1,131 பங்கேற்றதாக கூறப்படுகிறது.

மாநாட்டில் பங்கேற்று விட்டு திரும்பிய சிலருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாநாட்டில் பங்கேற்றோர் தாமாக முன்வந்து மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென, சுகாதாரச் செயலர் பீலா ராஜேஷ் வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து ஈரோடு, கோவை, சென்னை, நெல்லை நாமக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 1,103 பேர் நேற்று அந்தந்த மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் முதற்கட்டமாக 658 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 110 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், தேவகோட்டை, இளையான்குடி, சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 41 பேரில் 26 பேரை மருத்துவக் குழுவினர் பரிசோதித்தனர்.

இதில் திருப்பத்தூரைச் சேர்ந்த 3 பேர், தேவகோட்டை , இளையான்குடியைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் மொத்தம் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் திருப்பத்தூரில் கரோனா தொற்று உள்ளவர்கள் வசித்த பகுதிகள் முழுவதையும் யாரும் நடமாட முடியாதபடி போலீஸார் சீல் வைத்தனர்.
மேலும் திருப்பத்தூர் பேரூராட்சியில் ஏப்.3 -ம் (நாளை) தேதி முதல் 3 நாட்களுக்கு மருத்துவமனை, மருந்தகம், பால் கடையை தவிர காய்கறி, பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் மூட டிஎஸ்பி, வட்டாட்சியர் உத்தரவிட்டனர்.

மேலும் கரோனா தொற்று இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி பரிசோதிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அதே போல் புதுடெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த மற்றவர்கள் வசித்த பகுதிகளிலும் வட்டாட்சியர், போலீஸ் இன்ஸ்பெக்டர், மருத்துவர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் அப்பகுதிகளில் கிருமினி நாசினி தெளிக்கும் பணிகளில் உள்ளாட்சி அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in