Published : 02 Apr 2020 01:56 PM
Last Updated : 02 Apr 2020 01:56 PM

வேலைக்கு வந்தால்தான் சம்பளம்: நீலகிரி தேயிலைத் தொழிலாளர்களை நெருக்கும் நிர்வாகங்கள்

நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், பிற துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களைப் போலவே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் பணியிழந்து வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் நான்கு பேருக்கு கரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் உறுதி செய்துள்ளனர். இந்தச் சூழலில், எஸ்டேட் நிர்வாகங்கள் கொடுக்கும் அழுத்தத்தால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் தொழிலாளர்கள்.

அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்துக்குத் தடை இல்லை என்று அரசு அறிவித்திருக்கும் நிலையில், அந்தப் பட்டியலில் தேயிலையையும் சேர்த்து, தோட்டத் தொழிலாளர்களை அன்றாடப் பணிக்கு வரச் சொல்லி நீலகிரி தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் சுமார் 17 பெரிய தேயிலை எஸ்டேட்டுகளும், இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறு, குறு தேயிலை எஸ்டேட்டுகளும் உள்ளன. இவற்றில் 2 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், சில நாட்களாக அரசு தேயிலை எஸ்டேட்டுகள் உட்பட பெரிய எஸ்டேட் நிர்வாகத்தினர், “தேயிலை விவசாயத் தொழில்தான். அது அத்தியாவசியப் பண்டங்கள் பட்டியலில்தான் வருகிறது. எனவே, தொழிலாளர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் இந்த மாதம் சம்பளம் கிடைக்காது” என மிரட்டி, தொழிலாளர்களை வேலைக்கு அழைக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் செய்வதறியாது தொழிலாளர்கள் திகைத்து நிற்க, தகவல் அறிந்த தோட்டத் தொழிலாளர் சங்கத்தினர் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டிருக்கின்றனர்.

“தேயிலை விவசாயத் தொழிலாக இருந்தாலும் அது வெறுமனே தேயிலை பறிப்பதுடன் நின்றுவிடுவதல்ல. தேயிலையை மூட்டை பிடிப்பது, லாரியில் ஏற்றி தொழிற்சாலைக்குக் கொண்டு செல்வது, தூளாக்கி பாக்கெட் செய்வது என பல கட்டங்களைக் கடக்கிறது. இந்தச் சூழலில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தற்போது அரசு அறிவித்துள்ள 1.5 மீட்டர் சமூக இடைவெளியைத் தொழிலாளர்களால் கடைப்பிடிக்க முடியாது. குறிப்பாக, எஸ்டேட்டுகளில் இந்த ஒன்றரை மீட்டர் இடைவெளியில் ஒவ்வொருவரும் நிற்பது சாத்தியமே இல்லாதது.

எல்லோரும் ஒரே வரிசையில் குவியலாகச் சென்று குழுவாகச் செயல்படும் தொழில் இது. நெருக்கடியான இந்த நேரத்தில் தொழிலாளர்கள் பணிக்குச் சென்று கரோனா தொற்றுக்குள்ளானால் யார் பொறுப்பு? எனவே, தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லக் கூடாது” என்று தடுத்து நிறுத்தியிருக்கும் தோட்டத் தொழிலாளர் சங்கத்தினர், “இந்தக் காலகட்டத்தில் தொழிலாளர் வேலையிழப்புக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கூடலூர் விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் செல்வராஜ் நம்மிடம் பேசுகையில், ''எஸ்டேட் நிர்வாகத்தினரின் பேச்சைக் கேட்டு சில தொழிலாளர்களும் வேலைக்குச் சென்றுவிட்டனர். அப்படி வந்த தொழிலாளர்களிடம், ‘நாங்கள் நல்ல உடல்நலத்துடன்தான் இருக்கிறோம். எங்களுக்குக் காய்ச்சல், சளி போன்ற நோய்த்தொற்றுகள் ஏதும் இல்லை. இந்தப் பணிக்கு நாங்களே சுய விருப்பின் பேரில் வருகிறோம். இங்கே பணிபுரியும் நிலையில் வேறு ஏதாவது நோய்த் தொற்று ஏற்பட்டால், அதற்கு நாங்களே பொறுப்பேற்கிறோம்'' என்று கடிதம் எழுதித் தரச் சொல்லி நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.

தாமதமாகத்தான் இந்தத் தகவல் எங்களுக்கு வந்தது. இதையடுத்து தொழிலாளர்களைச் சந்தித்து, இன்றைக்கு இருக்கும் மோசமான சூழலை எடுத்துச் சொல்லி பணிக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். அதற்குப் பிறகே தொழிலாளர்கள் சமாதானம் அடைந்தனர். இதை அரசு நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளோம்” என்றார்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை இதுபோன்ற நெருக்கடிகளிலிருந்து காப்பாற்ற அரசு முன்வர வேண்டும்!.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x