

கோவை மாநகராட்சி சார்பில் வாகனம் மூலம் காய்கறி விற்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து காய்கறி வாங்க பொதுமக்கள் வெளியே வருவதைத் தடுக்க கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வேளாண் துறையுடன் இணைந்து பொதுமக்களின் இருப்பிடத்துக்கே சென்று வாகனங்கள் மூலம் காய்கறி விற்கும் திட்டம் இன்று (ஏப்.2) தொடங்கப்பட்டது.
மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
மண்டலத்துக்கு தலா 5 என மொத்தம் 25 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்கப்படுகின்றன. 12 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100 மற்றும் ரூ.200 என இரண்டு வகை விலைகளில் விற்கப்படுகிறது. இந்த வாகனங்களில் உள்ள ஒலிப்பெருக்கி மூலம் காய்கறி விற்பனை குறித்த அறிவிப்பு செய்யப்படுகிறது. மேலும், காய்கறிகளை உற்பத்தி செய்த விவசாயியும் அந்த வாகனத்தில் இருப்பார் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.