Published : 02 Apr 2020 12:55 PM
Last Updated : 02 Apr 2020 12:55 PM

மாதக்கடன் தவணை ஒத்திவைப்பு ஏமாற்று வேலை ஆகிவிடக்கூடாது: வட்டித் தள்ளுபடியும் வழங்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

கடன் தவணை ஒத்திவைப்பு என்பது ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான வட்டியும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய முன்வராத வங்கிகள், கடன் செலுத்தத் தவறியவர்களுக்கு அபராதம் விதிப்பதைப் போன்று கூடுதல் வட்டி செலுத்த வாடிக்கையாளர்களைக் கட்டுப்படுத்துவது வணிக அறத்திற்கு எதிரானது ஆகும் என ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

”கரோனா வைரஸ் நோய்ப் பரவல் அச்சம் மற்றும் ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்தவர்களின் பொருளாதார நெருக்கடியை தற்காலிகமாக தீர்க்கும் வகையில் அனைத்து வகை கடன்களுக்கான மாதத் தவணையை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால், இதில் நிவாரணம் அளிப்பதற்குப் பதிலாக அபராதம் வசூலிக்க வகை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

மாதக்கடன் தவணையை ஒத்திவைப்பது தொடர்பாக ஒவ்வொரு வங்கியும், ஒவ்வொரு அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றன. சில வங்கிகள் தாங்களாகவே கடன் தவணையை ஒத்திவைத்துள்ளன. இன்னும் சில வங்கிகள் வாடிக்கையாளர்கள் எழுத்துபூர்வமாக விண்ணப்பித்தால் மட்டுமே கடன் தவணையை ஒத்திவைக்கின்றன.

ஆனால், ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான தொகைக்கு, கடன் செலுத்தி முடிக்கும் காலம் முழுமைக்கும் வட்டி செலுத்தியே தீர வேண்டும் என்று வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்துவதில் மட்டும் அனைத்து வங்கிகளும் ஒரே அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றன.

உதாரணமாக, பாரத ஸ்டேட் வங்கியில் ஒருவர் ரூ.30 லட்சம் வீட்டுக் கடன் வாங்கியிருப்பதாகவும், அக்கடனுக்கு இன்னும் 15 ஆண்டுகள் தவணை செலுத்த வேண்டியிருப்பதாகவும் வைத்துக் கொள்வோம். அவர் அடுத்த 3 மாதங்களுக்கு தவணை செலுத்தவில்லை என்றால், அந்த 3 மாதங்களுக்கான தவணைத் தொகை, அவர் செலுத்த வேண்டிய அசல் தொகையுடன் சேர்க்கப்படுகிறது.

அத்துடன் அந்தத் தொகைக்கு அடுத்த 15 ஆண்டுகளுக்கும் அவர் வட்டி செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி பார்த்தால் அவர் தவணைக்காலம் முழுமைக்கும் சேர்த்து ரூ.2.34 லட்சம் கூடுதல் வட்டி செலுத்த வேண்டும். இதற்காக அவரது கடன் தவணைக் காலம் 8 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.

15 ஆண்டுகள் தவணைக்காலம் கொண்ட ரூ.30 லட்சம் வீட்டுக் கடனுக்கு, மாதத் தவணையாக ரூ.28,500 மட்டுமே செலுத்த வேண்டும். 3 மாதங்களுக்கு அவர் கட்டாமல் இருக்கும் தொகை ரூ.85,500 மட்டும் தான். ஆனால், அவ்வாறு செலுத்தாமல் இருப்பதற்காக அந்தத் தொகையை செலுத்துவது மட்டுமின்றி, ரூ.2.34 லட்சம் கூடுதல் வட்டி வசூலிக்க வங்கிகள் துடிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் என்ற தத்துவத்தின் அடிப்படைக்கே எதிரானதாகும்.

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து வாடுகின்றனர். சுயதொழில் செய்பவர்கள் வருவாயை இழந்து தவிக்கின்றனர்.

இந்த நிலை மாறி இயல்பு நிலை திரும்புவதற்கு இன்னும் எத்தனை மாதங்கள் ஆகும் என்பது தெரியவில்லை. அதனால்தான் மாதக்கடன் தவணை செலுத்துவதில் இருந்து 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்கும்படி பாமக வலியுறுத்தியது. ரிசர்வ் வங்கியும் அதையேற்று 3 மாதக் கடன் தவணைகளை ஒத்திவைக்க வங்கிகளை அனுமதித்தது.

கடன் தவணை ஒத்திவைப்பு என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சலுகை என்பதால், ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கான வட்டியும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய முன்வராத வங்கிகள், கடன் செலுத்தத் தவறியவர்களுக்கு அபராதம் விதிப்பதைப் போன்று கூடுதல் வட்டி செலுத்த வாடிக்கையாளர்களைக் கட்டுப்படுத்துவது வணிக அறத்திற்கு எதிரானது ஆகும்.

அனைத்தையும் இழந்து நிற்கும் ஒருவனுக்கு நம்மால் முடிந்த உதவிகளை வழங்குவதுதான் அறமே தவிர, அவனுக்கு செய்த உதவிக்கான தொகையை வட்டி போட்டு வசூலிப்பது அறம் அல்ல.

எனவே, இந்தப் பிரச்சினையில் இந்திய ரிசர்வ் வங்கி தலையிட வேண்டும். 3 மாதக் கடன் தவணை ஒத்திவைப்புக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், எந்த விதமான கூடுதல் கட்டணமும் இன்றி மார்ச் 31-ம் தேதியன்று எவ்வளவு நிலுவைத் தொகை உள்ளதோ, அதை மட்டும், மாதக் கடன் தவணைத் தொகையை அதிகரிக்காமல் வசூலிக்குமாறு வங்கிகளுக்கு ஆணையிட வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x