Last Updated : 02 Apr, 2020 12:01 PM

 

Published : 02 Apr 2020 12:01 PM
Last Updated : 02 Apr 2020 12:01 PM

டெல்லி மாநாட்டுக்குச் சென்றவர்கள் தாமாக முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்: தமிமுன் அன்சாரி கோரிக்கை

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களில் இன்னும் பலர் அடையாளம் காணப்படாத நிலையில், அவர்கள் தாமாக முன் வந்து மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாகப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''டெல்லி சென்று வந்தவர்கள் அந்தந்த ஊர் ஜமாத்தினர், குடும்பத்தினரின் ஆலோசனையின் படி, அதிகாரிகளின் வழிகாட்டலை ஏற்று மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்பட்டு இருக்கிறார்கள். இதையும் கடந்து யாரேனும் கவனக்குறைவாக இருந்தால், அவர்கள் தாமாக முன் வந்து மருத்துவப் பரிசோதனைகளுக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாட்டின் சூழல், பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு, தங்கள் குடும்பத்தினர் நலம் ஆகியவை இதில் அடங்கியிருக்கிறது. அதே சமயம் இவ்விஷயத்தில் வரம்பு மீறிய விமர்சனங்களை சிலர் பரப்புவது நியாமற்றது ஆகும்.

தப்லீக் ஜமாத் என்பது அரசியல், சமுதாய சேவை ஆகியவற்றில் ஆர்வம் காட்டாத ஓர் ஆன்மிக அமைப்பாகும். அவர்கள், ஐந்து வேளை இறைவனைத் தொழ வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கையை முஸ்லிம்களிடம் மட்டும் பரப்புரை செய்பவர்கள். வேறு எதையும் இவர்கள் செய்வதில்லை. சொந்தப் பணத்தில் பயணம் மேற்கொள்பவர்கள், மிகவும் சாதுவானவர்கள் என்பதும் மத்திய - மாநில அரசுகளும், உளவு அமைப்புகளும் அறிந்த உண்மைகளாகும். தப்லீக் பணிகள் மற்றும் சுற்றுப் பயணங்கள் குறித்து ஓராண்டுக்கு முன்பாகவே, இவர்கள் திட்டமிடுபவர்கள்.

அவ்வாறு திட்டமிட்டு மார்ச் 21-ம் தேதி அன்று டெல்லியில் கூடியிருக்கின்றார்கள். இதற்காக சொந்த ஊர்களிலிருந்து மார்ச் 18 மற்றும் 19 தேதிகளில் புறப்பட்டுவிட்டார்கள். பிரதமர் மார்ச் 22 அன்றுதான் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார். அதன் பிறகே நிலைமைகளை உணர்ந்து தப்லீக் ஜமாத்தினரும் தங்கள் ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கி உள்ளார்கள். பலர் திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக் கொண்டுள்ளனர்.

அங்கு ஊர் திரும்ப முடியாமல் தங்கியிருந்தவர்கள் குறித்த விவரமும் டெல்லி காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் திட்டமிட்டு எந்த விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை. அதே மார்ச் 22 அன்று ஏற்கெனவே திட்டமிட்டபடி நாடு முழுவதிலுமிருந்து வந்த பல்லாயிரக்கணக்கானோர் அயோத்தியில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஒன்று கூடியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மிக முக்கியமாக இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மார்ச் 23 வரை நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை மார்ச் 24 வரை நடைபெற்றது. மேலும், பிரதமர் அறிவிப்பு செய்யும் வரை உள்நாடு, வெளிநாட்டு விமானப் போக்குவரத்தும் தடைசெய்யப்படவில்லை.

இதுபோன்ற நெருக்கடியான தருணங்களில் எவ்வாறு பொதுமக்கள் நடந்துகொள்ள வேண்டும் என இஸ்லாமிய மார்க்கம் வழிகாட்டியுள்ளது. நபிகள் நாயகம் "ஒரு ஊரில் தொற்றுநோய் பரவினால் அவ்வூரை விட்டு யாரும் வெளியேற வேண்டாம். அந்த ஊருக்கு யாரும் போகவும் வேண்டாம்" என போதித்துள்ளார். இதன் அடிப்படையிலும், அரசின் அறிவிப்பை ஏற்றும் தமிழகம் உட்பட நாடு முழுக்க ஐந்து வேளை தொழுகை நடக்கும் பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டுள்ளன. மதரஸா போன்ற பாட சாலைகளும், தர்காக்களும் மூடப்பட்டுள்ளன. அனைத்து மதத்தினரும் பயன்படுத்தும் நாகூர் தர்கா 463 ஆண்டுகளில் முதன்முறையாகப் பூட்டப்பட்டுள்ளது.

மனிதநேய ஜனநாயகக் கட்சி போன்ற கட்சிகளும், சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இயக்கங்களும் அதிகாரிகளுடன் இணைந்து சுகாதாரப் பணிகளிலும், இலவச உணவு விநியோகிக்கும் பணிகளிலும் தன்னார்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதையெல்லாம் புறக்கணித்துவிட்டு, டெல்லி நிகழ்வை மட்டுமே மையப்படுத்தி பிரிவினையை வளர்ப்பது நல்ல பண்பல்ல. இதை முன்னிறுத்தி ஒரு சமூகத்தையே குறிவைத்து நடக்கும் பரப்புரைகளை அனைவரும் கண்டிக்க வேண்டும்.

இவ்விஷயத்தில் மத்திய - மாநில அரசுகளுடன் இணைந்து நின்று கரோனா நோயை ஒழிக்க உறுதியுடன் அனைவரும் இணைந்து நிற்போம். மாறாக, இத்தருணத்தில் பிரிவினையைத் தூண்ட வேண்டாம். அதேசமயம், தேச நலன் கருதி, டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட அத்தனை பேரும் தங்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள தாங்களாகவே முன்வரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x