

அத்தியவாசியப் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் வீதிக்கு வருவதைத் தடுக்கும் நோக்கத்தில் மதுரையில் வழக்கறிஞர்கள் வீடு வீடாகச் சென்று காய்கறி விற்பனை செய்து வருகின்றனர்.
ஊடரங்கு அமலில் இருக்கும் நிலையிலும் அத்திவாசியப் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் வெளியே வருகின்றனர். நெருக்கடியான இடங்களில் செயல்படும் சந்தைகளில் கூட்டம் கூடுவதை தடுக்க பஸ் நிலையங்களிலும், பொது மைதானங்களுக்கும் காய்கறி சந்தைகள் மாற்றப்பட்டுள்ளன.
இந்த சந்தைகளிலும் காலை நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
அத்திவாசியத் தேவைகளுக்காக மக்கள் வீதிகளுக்கு வருவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. பல இடங்களில் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்காக மக்கள் செல்கின்றனர்.
இதைத் தடுக்க நடமாடும் ஏடிஎம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்து காய்கறிகள் வாங்க மக்கள் அதிகளவில் வெளியே வருகின்றனர். இதையடுத்து மதுரை மாநகராட்சியில் நடமாடும் காய்கறி சந்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியுடன் சேர்ந்து மதுரையில் வழக்கறிஞர்கள் வீதி வீதியாக சென்று காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.
இவர்கள் கரோனா பீதியால் மதுரையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வெளியே வர முடியாமல் தவிக்கும் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கே நேரில் சென்ற காய்கறி விற்பனை செய்கின்றனர்.
20 வகையான காய்கறிகள் அடங்கிய பை ரூ.220-க்கு விற்கப்பட்டது. வழக்கறிஞர்கள் அசோக், பைரவ்குமார், ஷாஜிசெல்லன், முத்துக்குமார், ரமேஷ், சரண், சவுரிராஜன் ஆகியோர் காய்கறி விற்பனையில் ஈடுபட்டனர்.